உலகக் கோப்பை கால்பந்தாட்ட மைதானத்தில் தொழுகை நடத்தப்பட்டதா?

சமயம் சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup Qatar 2022) நடைபெறும் மைதானத்தில் தொழுகை நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

விளையாட்டு மைதானம் ஒன்றில் தொழுகை நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “FIFA உலகக் கோப்பை கால் பந்தாட்ட மைதானத்தில் தொழகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Trichy Abdul Rahim என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் கத்தாரில் தொடங்கி நடந்து வருகிறது. அதை வைத்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவ ஆரம்பித்துள்ளன. உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு இஸ்லாமியர்களின் பிரார்த்தனையான தொழுகை நடத்தப்பட்டது என்று சிலர் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த மைதானம் கத்தாரில் உள்ள மைதானம்தானா என்பதை உறுதி செய்ய எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. மைதானத்தில் “KAZAN” என்று எழுதப்பட்டிருந்தது. வேறு எந்த தகவலும் அதில் இல்லை. எனவே, இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ பற்றிய முழு தகவலும் நமக்குக் கிடைத்தது.

நம்முடைய தேடலில், இந்த வீடியோவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சிலர் யூடியூபில் பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. மேலும், இந்த மைதானம் ரஷ்யாவில் உள்ளது என்று குறிப்பிட்டு பலரும் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. Islamic Prayer In A Stadium in Russia Kazan என்று குறிப்பிடப்பட்டிருக்கவே, அந்த குறிப்பிட்ட ஸ்டேடியத்தை தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: transfermarkt.co.in I Archive 1 I dspkazan.com I Archive 2

கூகுளில் Russia Kazan என்று தேடிய போது ரஷ்யாவில் Ak Bars Arena Stadium என்று ஒரு ஸ்டேடியம் இருப்பதாகவும் அது ரஷ்யாவின் கால்பந்தாட்ட குழுவான  FC Rubin Kazan-ன் ஹோம் கிரவுண்ட் ஸ்டேடியம் (சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேப்பாக்கம் சொந்த மைதானம் என்பது போல) என்று குறிப்பிட்டு சில பதிவுகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: Google Map I Archive

Ak Bars Arena Stadium என்று கூகுள் மேப்பில் டைப் செய்து தேடிய போது, ரஷ்யாவில் உள்ள மைதானம் நமக்குக் கிடைத்தது. அந்த மைதானத்தின் உள்ளே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்தது போன்று Kazan என்று எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ கத்தாரில் நடந்து வரும் 2022 உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மூன்றாண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் ஒரு ஸ்டேடியத்தில் நடந்த தொழுகை வீடியோவை எடுத்து ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் தொழுகை நடந்தது என்று தவறான தகவலை பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உலகக் கோப்பை கால்பந்தாட்ட மைதானத்தில் தொழுகை நடத்தப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False