“தலைமைக்குத் தகுதியான மனிதன் உதயநிதி” என்ற பாடலை கேட்டபடி பயணித்தாரா திருமாவளவன்?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தலைமைக்குத் தகுதியான மனிதன் உதயநிதி என்ற பாடலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காரில் கேட்டுக்கொண்டே பயணம் செய்தார் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “‘தலைமைக்கு தகுதியான மனிதன் உதயநிதி’.. ஆதவ் அர்ஜூனாவை நீக்கிய பின் திருமாவளவன் கேட்டு மகிழ்ந்த பாடல்!” என்று இருந்தது. நிலைத் தகவலில், “யாரை திருப்தி படுத்த 6 மாதம் தொல்லு நம்மை ஏமாற்றுகிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க மற்றும் தமிழ்நாடு அரசை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த ஆதவ் அர்ஜுனா விமர்சித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவர் நீக்கத்துக்கு தி.மு.க கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்கிய பிறகு உதயநிதி ஸ்டாலின் தொடர்பான தி.மு.க பாடலை திருமாவளவன் காரில் கேட்டுக்கொண்டே பயணித்ததாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

உண்மைப் பதிவைக் காண: oneindia.com I Archive

இந்த செய்தியைப் பார்த்தோம். அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது தொடர்பாக எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை.

வன்னி அரசுவின் எக்ஸ் தள பக்கத்தைப் பார்வையிட்டோம். ஆனால் நமக்கு அப்படி எந்த ஒரு பதிவும் கிடைக்கவில்லை. எனவே, அந்த பதிவை அவர் வெளியிட்டுவிட்டு அகற்றிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, எக்ஸ் தளத்தில் பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது வன்னி அரசு பெயரில் போலியாக இயங்கும் எக்ஸ் தள பக்கத்தில் இப்படி ஒரு வீடியோ வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. 

வன்னி அரசுக்கு எதிராக தொடர்ந்து அந்த எக்ஸ் தள பக்கத்தில் வன்மமான பதிவுகள் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. மேலும், சுய விவர குறிப்பு பகுதியில், ” The official ⚡️Parody Account⚡️ of வன்னி அரசு என்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர், #திமுக ‘தலித்’ அணி | Chief Coordinator of #DMK ‘Dalit’ Wing” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வன்னி அரசு மீது வெறுப்பில் உள்ள ஒருவர் வன்னி அரசு பெயரில் உருவாக்கிய போலியான பக்கம் இது என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

சரி வீடியோவை எங்கிருந்து எடுத்திருக்கிறார்கள் என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது உதயநிதி ஸ்டாலின் பாடலை கேட்ட திருமா என்று எக்ஸ் தளத்தில் அவரது எதிர்ப்பாளர்கள் பதிவிட்ட பதிவுகள் மட்டுமே கிடைத்தன. எனவே, கூகுளில் காரில் சாப்பிட்ட திருமாவளவன் என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். 

அப்போது இந்த வீடியோவை Behindwoods Air News என்ற ஊடகம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்தது. அதில் உதயநிதி பாடல் இல்லை. திருமாவளவன் காரில் செல்லும் போதே சாப்பிட்டார் என்று அவரைப் பற்றிய செய்திதான் இருந்தது. இதே வீடியோவை வேறு சிலரும் வேறு வேறு பாடல்களுடன் வெளியிட்டிருந்தனர். 

ஆதவ் அர்ஜுனா விவகாரம் 2024 டிசம்பரில் நடந்தது. ஆனால் இந்த வீடியோ 2023 பிப்ரவரியில் வெளியாகி உள்ளது. மேலும், வன்னி அரசு பெயரில் செயல்படும் போலியான எக்ஸ் தள பக்கம் உதயநிதி பாடலை கேட்பது போன்று வீடியோவை எடிட் செய்திருப்பது உறுதியாகி உள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

2023ம் ஆண்டு திருமாவளவன் காரில் பயணம் செய்த போது உணவு உட்கொண்ட வீடியோவை எடிட் செய்து வன்னி அரசு பெயரில் உள்ள போலியான எக்ஸ் தள பக்கத்தில் இருந்து தவறான வீடியோ பகிரப்பட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“தலைமைக்குத் தகுதியான மனிதன் உதயநிதி” என்ற பாடலை கேட்டபடி பயணித்தாரா திருமாவளவன்?

Fact Check By: Chendur Pandian 

Result: False