
‘’டிரம்ப் உருவபொம்மையை எட்டி உதைத்து, பாசிசத்திற்கு இழிவான பரிசு அளிக்கும் மக்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
நவம்பர் 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அமெரிக்க மக்கள், டிரம்ப் உருவ பொம்மையை எட்டி உதைத்து சிரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பகிர்ந்து, ‘’ பாசிசத்திற்கு கடைசியில் மக்கள் இப்படித் தான் இழிவான பரிசை அளிப்பார்கள். இதுவே வரலாறு,’’ என்று தலைப்பிட்டுள்ளனர்.
எனவே, இது தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பிரதிபலித்து பகிரப்படும் தகவலாகக் கருதப்படுகிறது.
இதனை பலரும் உண்மை என நம்பி, வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
Screenshot: Various FB posts with same caption
உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட டிரம்பை, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தோற்கடித்துள்ளார். இதையடுத்து, டிரம்ப் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. அவரை தொடர்ந்து, ஜோ பைடன் 2021 ஜனவரியில் அதிபர் பதவி ஏற்க உள்ளார்.
அதேசமயம், டிரம்ப் தோல்வியை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவரை பற்றி காரசாரமான விமர்சனங்களும், பல கேலி, கிண்டல் மீம்ஸ்கள், வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றுதான் நாம் மேலே கண்ட வீடியோ பதிவும். உண்மையில், அந்த வீடியோ, தற்போதைய 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை ஒட்டி எடுக்கப்பட்டதல்ல. அது 2017ம் ஆண்டு முதலே இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஒன்றாகும்.
பழைய வீடியோவை சரியான விவரம் இன்றி புதியது போல தற்போது, சமூக வலைதளத்தில் டிரம்ப் எதிர்ப்பாளர்கள் பகிர்வது, மற்ற சாமானிய மக்களை குழப்புவதாக உள்ளது.
2017, ஜூன் மாதம் இந்த வீடியோ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுபற்றிய மற்றொரு வீடியோ லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதன்படி, இது எங்கே, எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்ற ஆதாரம் தேடினோம். அப்போது, Kicking Trump’s Ass 2017 Fremont Solstice Parade என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ட்விட்டர் பதிவின் லிங்க் கிடைத்தது.
அதனையும் கீழே இணைத்துள்ளோம்.
இந்த தகவல் பற்றி கூடுதல் விவரம் தேடினோம். அப்போது இதே வீடியோவின் மற்றொரு பகுதி காண கிடைத்தது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில், ஆண்டுதோறும் கோடை காலத்தில் குறிப்பிட்ட கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, 2017ம் ஆண்டு நடந்த கொண்டாட்ட நிகழ்வின்போது, அமெரிக்க மக்கள், டொனால்டு டிரம்ப் உருவபொம்மையை இப்படி இழுத்து வந்து, அதனை பின்புறத்தில் எட்டி உதைத்துள்ளனர்.
அதற்கு முன்பும் கூட அமெரிக்க மக்கள் இதுபோன்ற வேடிக்கை நிகழ்வுகளை டிரம்பை மையமாக வைத்துச் செய்திருக்கின்றனர். நாமும் கூட இதற்கு முன்பு, இதுபோல நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்திருக்கிறோம்.
எனவே, 2017ம் ஆண்டு முதலாக, இணையத்தில் பகிரப்படும் வீடியோவை எடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 முடிவுகளுடன் தொடர்புபடுத்தி, சரியான விவரம் கூறாமல் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் குழப்பக்கூடியதாக உள்ளதென்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:டிரம்ப் உருவ பொம்மையை எட்டி உதைக்கும் அமெரிக்கர்கள்- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: Missing Context
