FACT CHECK: நல்லாட்சி மாநிலங்கள்: மகாராஷ்டிரா 2ம் இடம் என தினத்தந்தி தலைப்புச் செய்தி வெளியிட்டது ஏன்?

சமூக ஊடகம் சமூகம் தமிழ்நாடு

நல்லாட்சி வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த மகாராஷ்டிராவை கொட்டை எழுத்தில் போட்டுவிட்டு, முதல் இடம் வாங்கிய தமிழ்நாட்டை சிறிய எழுத்தில் போட்டுள்ளது தினத்தந்தி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தினத்தந்தி முதல் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் உடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. தினத்தந்தியில் “மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் இந்தியாவிலேயே மராட்டியம் 2-ம் இடம். முதல் இடத்தில் தமிழகம்” என்று இருந்தது.

அதற்குக் கீழே போட்டோஷாப் முறையில் தமிழில் டைப் செய்யப்பட்டு இருந்தது. அதில், “இரண்டாம் இடம் வாங்கிய மராட்டியம் கொட்ட எழுத்தில்,.. முதல் இடம் வாங்கின தமிழகம் சின்ன எழுத்தில். இதைத்தான் *** ஊடகம் என்கிறோம்” என்று இருந்தது. இந்த பதிவை Lakshmanan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். சில ஆண்டுகளாகவே இந்த பதிவை பலரும் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

முதலிடம் பிடித்த தமிழ்நாட்டின் பெயரை பெரிய எழுத்தில் குறிப்பிடாமல், 2ம் இடம் பிடித்த மகாராஷ்டிரா பெயரைத் தினத் தந்தி நாளிதழ் முதலில் குறிப்பிட்டுள்ளது என்று கூறி ஊடகத்தினரைத் தரக்குறைவான வார்த்தைகளில் பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

அச்சு ஊடகம், காட்சி ஊடகம் எதுவாக இருந்தாலும் சரி, தான் இருக்கும் இடத்தில் நிகழும் மிகப்பெரிய சம்பவத்தை மையப்படுத்தி செய்திகள் வெளியிடும். அச்சு ஊடகங்களுக்கு தமிழகம் முழுக்க முக்கிய நகரங்களில் கிளைகள் இருக்கும். இந்தியாவில் தமிழர்கள் ஓரளவுக்கு அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் செய்தித்தாளைப் பதிப்பிக்க அலுவலகங்கள் வைத்திருப்பார்கள். தினத்தந்திக்கு சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை எனப் பல நகரங்களில் கிளைகள் உள்ளன. மேலும் இலங்கை, துபாயிலும் கூட கிளைகளை அது கொண்டுள்ளது. அந்த நகரங்களுக்கு ஏற்ப தலைப்புச் செய்தியை மாற்றி வெளியிடுவார்கள்.

அந்த வகையில் மும்பை பதிப்புக்கு ஏற்ப மகாராஷ்டிரா 2வது இடம் பிடித்ததை, தினத்தந்தி பெரிய எழுத்துக்களில் வெளியிட்டதை எடுத்து வந்து பலரும் விமர்சித்து வருவதைக் காண முடிகிறது. இதை உறுதி செய்ய சென்னை பதிப்பில் வெளியான முதல் பக்கத்தைத் தேடினோம். இந்த செய்தி 2019ம் ஆண்டு வெளியானது. ஆனால், தினத்தந்தியின் இ-பேப்பர் 2020ம் ஆண்டிலிருந்து மட்டுமே பார்க்கக் கூடியதாக இருந்தது. எனவே, வேறு தளங்களில் 27-12-2019ம் ஆண்டு வெளியான தினத்தந்தியின் இ-பேப்பர் கிடைக்கிறதா என்று பார்த்தோம். 

அசல் பதிவைக் காண: pressreader.com I Archive

pressreader.com என்ற தளத்தில் நமக்கு தினத்தந்தி சென்னை பதிப்பின் இ-பேப்பர் கிடைத்தது. அதில், முதல் பக்கத்தில் “மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம். மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் தகவல்” என்று இருந்தது. அதில் மகாராஷ்டிரா 2வது இடம் பிடித்தது பற்றிக் கூட எந்த குறிப்பிடவில்லை. 

அதிமுக ஆதரவு ட்விட்டர் பக்கம் ஒன்றில் சேலம் பதிவு வெளியிட்டிருந்த செய்தியை பகிர்ந்திருந்தனர். அதிலும் “இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம்” என்று பெரிய எழுத்துக்களில் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் 27-12-2019 அன்று தமிழ்நாட்டில் வெளியான தினத்தந்தி நாளிதழில் தமிழ்நாடு முதலிடம் பிடித்த செய்திதான் முக்கியமாக பெரிய எழுத்துக்களில் வெளியாகி இருந்தது என்பது உறுதியாகிறது.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்தைப் பார்த்தோம். அதில் இந்த நாளிதழ் அச்சிடப்பட்ட இடம் பகுதியில் “மும்பை” என்று இருந்தது. மகாராஷ்டிராவில் வசிக்கும் தமிழர்களுக்காக அச்சிடப்பட்ட நாளிதழ் அது. அதனால் அந்த மாநில மக்களுக்கு ஏற்ற வகையில் மகாராஷ்டிரா இரண்டாவது இடம் என்று குறிப்பிட்டிருப்பது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில், 27-12-2021 அன்று வெளியான சென்னை மற்றும் சேலம் பதிப்பு தினத்தந்தியில் மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு முதலிடம் கிடைத்திருப்பது தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலிருந்து வெளியாகும் தினத்தந்தி நாளிதழிலில் மட்டும் அந்த மாநில மக்களுக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா 2ம் இடம் பிடித்த செய்தி தலைப்பு செய்தியாக வெளியிடப்பட்டிருப்பது உறுதியாகிறது.

இந்த அடிப்படை விஷயத்தைத் தெரிந்துகொள்ளாமல், முதலிடம் பிடித்த தமிழ்நாட்டை தினத்தந்தி புறக்கணித்துவிட்டு, மகாராஷ்டிராவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக விஷமத்தனமான தகவல் பகிரப்பட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நல்லாட்சி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடம் பிடித்த செய்தியை தவிர்த்துவிட்டு மகாராஷ்டிரா 2வது இடம் பிடித்ததற்கு முக்கியத்துவம் கொடுத்து தினத் தந்தி செய்தி வெளியிட்டது என்று பகிரப்படும் தகவல்  தவறானது என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நல்லாட்சி மாநிலங்கள்: மகாராஷ்டிரா 2ம் இடம் என தினத்தந்தி தலைப்புச் செய்தி வெளியிட்டது ஏன்?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading