FACT CHECK: மோடியின் வாரணாசி பா.ஜ.க அலுவலகம் என்று பகிரப்படும் குஜராத் படம்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பாஜக அலுவலகம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

குப்பைகள் கொட்டப்பட்ட சாக்கடை ஓரம் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலக புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பா.ஜ.க வின் கட்சியின் வாரணாசி அலுவலகம் இதுதான்!! நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே நடிப்பில் முந்திய பாரத பிரதமர் இங்கு சென்றிருக்க மாட்டாரோ?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முகநூல் பேரவை என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த பதிவை வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தூய்மை இந்தியா என்று பிரதமர் மோடி ஆறு ஆண்டுகளாக கூறி வருகிறார். குப்பைகள் கொட்டப்பட்டு, மிக மோசமாக பாதிக்கப்பட்ட, சாக்கடை ஓடும் காவாய்க்கு உள்ளேயே பில்லர் எழுப்பி பா.ஜ.க அலுவலகம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தில் குஜராத்தி மொழியில் பாரதிய ஜனதா கட்சி என்று எழுதப்பட்டுள்ளது. மேலே அமித்ஷா, மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் உள்ளன.

குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதால் இந்த கட்டிடம் குஜராத்தில் உள்ளது என்று தெரிகிறது. மேலும், இந்த படத்தை சில ஆண்டுகளாகவே குஜராத்தில் மிக மோசமான நிலையில் உள்ள பா.ஜ.க அலுவலகம் என்று பலரும் பகிர்ந்து வந்துள்ளனர்.

2019ம் ஆண்டு சீன அதிபர் மாமல்லபுரம் வந்த போது, பிரதமர் மோடி தான் தங்கியிருந்த தனியார் நட்சத்திர ஹோட்டல் அமைந்திருந்த கடற்கரையைத் தூய்மைப்படுத்தினார். அப்போது, பலரும் குஜராத்தில் மோடி தூய்மை செய்ய வருவார் என்பதால் மிக மோசமான நிலையில் பா.ஜ.க அலுவலகத்தை வைத்துள்ளனர் என்று விமர்சித்து இதே படத்தை ஷேர் செய்திருந்தனர். நட்சத்திர ஹோட்டலை சுத்தம் செய்வதாக கூறுபவர்கள் இதையும் கவனிக்க வேண்டும் என்றும் பலரும் இதை பகிர்ந்திருந்தனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்த நிலையில் இந்த புகைப்படம் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ளது என்று பதிவிட்டுள்ளதால், இது குஜராத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

அசல் பதிவைக் காண: sautuk.com I Archive 1 I janjwar.comI Archive 2

அப்போது 2017ம் ஆண்டு இந்த புகைப்படத்தை இந்தி ஊடகங்கள் வெளியிட்டிருப்பது தெரிந்தது. மோடியின் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அவல நிலை என்று தலைப்பிட்டு அவர்கள் செய்தி வெளியிட்டிருந்தனர். குஜராத் மாநிலம் போடாட் நகரத்தில் இந்த பா.ஜ.க அலுவலகம் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: YouTube

இந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பா.ஜ.க-வை சார்ந்த சௌரவ் பட்டேல் வெற்றி 1998, 2002 மற்றும் 2007 தேர்தல்களில் வெற்றி பெற்று பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார் என்றும் தற்போது எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கூட பா.ஜ.க-வை சார்ந்தவர் தான் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த ஆதாரங்கள் மூலம் இந்த புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. 

முடிவு:

இந்த புகைப்படத்தில் உள்ளது குஜராத் மாநிலம் போடாட் நகரத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகம் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மோடியின் வாரணாசி பா.ஜ.க அலுவலகம் என்று பகிரப்படும் குஜராத் படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False