
கம்போடியாவில் உள்ள 1500 ஆண்டு பழமையான முருகன் சிலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலை சரி பார்த்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
மயில்மேல் அமர்ந்திருக்கும் முருகன் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1500 ஆண்டு பழமை வாய்ந்த முருகன் சிலை கம்போடியாவில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை TAMIL PAKKAM என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Anuratha Anuratha Anuratha என்பவர் 2021 ஜனவரி 8ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ் மன்னர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆட்சி செய்துள்ளனர் என்பதால் முருகன் வழிபாடு இந்த பகுதிகளுக்கு சென்றிருக்கலாம். இருப்பினும் இது கம்போடியாவில் உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.
அப்போது, இது கம்போடியாவில் இல்லை காட்மாண்டுவைச் சோர்ந்தது என்றும், தற்போது அமெரிக்காவில் ஒரு கண்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இந்த படம் பற்றி அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இது காட்மாண்டு பள்ளத்தாக்கைச் சார்ந்தது என்று பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. alamy.com உள்ளிட்ட புகைப்படங்கள் விற்பனை செய்யும் தளங்களில் இந்த புகைப்படம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் இந்து போர்க் கடவுள் குமாரா, பூர்வீகம்: காட்மாண்டு பள்ளத்தாக்கு, நேபாளம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: alamy.com I Archive 1 I agefotostock.com I Archive 2
நேபாளத்தில் எந்த இடத்தில் இந்த சிலை உள்ளது என்று தொடர்ந்து தேடினோம். அப்போது அமெரிக்காவில் உள்ள ஒரு கண்காட்சியகத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ள தகவல் நமக்கு கிடைத்தது. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். காட்மாண்டு பகுதியைச் சார்ந்த குமாரா சிலை என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த சிலை 7 முதல் 9ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: artic.edu I Archive 1 I globalnepalimuseum.com I Archive 2
தொடர்ந்து தேடியபோது இதே போன்று வேறு ஒரு சிலை நியூயார்க்கில் உள்ள தி மெட்ரோபாலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்-ல் இந்த சிலை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. தி மெட் 5வது அவென்யூ கண்காட்சியகத்தின் 252வது கேலரியில் இந்த சிலை உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதில், இந்த சிலை நேபாளத்தைச் சேர்ந்தது என்றும், 11 -12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
எந்த ஒரு பதிவிலோ, இடத்திலோ இது கம்போடியாவில் கிடைத்தது என்று குறிப்பிடவில்லை. நம்முடைய ஆய்வில் இந்த முருகன் சிலை நேபாளத்தைச் சேர்ந்தது என்பதும் தற்போது அது அமெரிக்காவில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த முருகன் சிலை கம்போடியாவைச் சார்ந்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கம்போடியாவில் உள்ள முருகன் சிலை என்று பகிரப்படும் படம் நேபாளத்தைச் சார்ந்தது என்பதும் அது தற்போது அமெரிக்காவில் இருப்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்த முருகன் சிலை கம்போடியாவை சேர்ந்தது இல்லை!
Fact Check By: Chendur PandianResult: Partly False
