
கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நிலையில், சிரித்த முகத்துடன் கரூர் விரைந்த மு.க.ஸ்டாலின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிரிச்சா முகத்தோடு கரூரில் இறங்கிய ஸ்டாலின்….
ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ் -சொன்ன வேலையை கச்சிதமா முடிச்சிட்டீங்க பாலாஜி…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் விபத்து ஏற்பட்டதுமே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவியையும் அறிவித்தார். இந்த நிலையில் கரூர் வந்த மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியாக சிரித்தபடி வந்தார். செந்தில் பாலாஜியைக் கண்டவுடன் “சொன்ன வேலையை சரியாக செய்தவிட்டாய் என்பது போல சிரித்தார்” என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், நாசர், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் உள்ளனர். நாசர், பொன்முடி எல்லாம் கரூர் சென்றதாகச் செய்தி இல்லை. எனவே, பழைய படமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படத்தை செந்தில் பாலாஜி தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் 2024ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், “471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன். தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அவர் இந்த பதிவை வெளியிட்டிருந்தார். அதன் பின்னணியை அறிய அப்போது வெளியான செய்திகளைத் தேடி எடுத்தோம். சிறையிலிருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்த பிறகு முதன் முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை விமானநிலையத்தில் வைத்து சந்தித்தார் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive
இதன் மூலம் 2024ம் ஆண்டு எடுக்கப்பட்ட (சம்பவம் நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது) பழைய புகைப்படத்தை எடுத்து, கரூருக்கு சிரித்த முகத்துடன் மு.க.ஸ்டாலின் வந்தார் என்று தவறான தகவலைப் பரப்பியிருப்பது தெளிவாகிறது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு விஷமத்தனமானது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2024ம் ஆண்டில் சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சசர் செந்தில் பாலாஜி சந்தித்த புகைப்படத்தை கரூர் சம்பத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:சிரித்த முகத்துடன் கரூர் வந்த மு.க.ஸ்டாலின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
