FACT CHECK: ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று பகிரப்படும் படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறப்பு விழா ஒன்றில் ரிப்பன் வெட்டும் புகைப்படத்தையும், போராட்டம் நடத்தும் புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் செயல் தலைவர் அன்று. தான் திறந்த ஆலைக்கு எதிராக போராட்டம் செய்யும் செயல் தலைவர் இன்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு என்ற பக்கத்தில் Sundar G என்பவர் 2020 செப்டம்பர் 15ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இந்த படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டது என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் உண்மை கண்டறியும் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் புதிது புதிதாக வதந்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

“இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த தொழில் வளம் மிகுந்த மாநிலம்” என்று தூத்துக்குடி செம்பு உருக்காலை, மசக்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அடிக்கல் நாட்டு விழாவில் மு.கருணாநிதி கூறியது போன்று படம் வைரலாக பகிரப்பட்டு வந்தது. பிரபல துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி கூட அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: patrikai.com I Archive 

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்திரராஜன் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியது தி.மு.க தான் என்று கூறியபோது, அவருக்கு பலரும் ட்விட்டரில் பதிலடி கொடுத்திருந்தனர். அதில், ஸ்டெர்லைட் ஆலையை அடிக்கல் நாட்டுவிழாவில் ஜெயலலிதா பங்கேற்ற படத்தையும் ஷேர் செய்திருந்தனர்.

https://twitter.com/nithya_shre/status/1123990584249737217

Archive

உண்மையில், தமிழரசு என்ற இதழில் வெளியான கட்டுரையில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய படத்தை மட்டும் மாற்றிவிட்டு, கருணாநிதி அடிக்கல் நாட்டியது போல பகிர்ந்திருப்பது உறுதியானது. மேலும், தமிழரசு இதழின் அந்த கட்டுரையில்  “தமிழக மக்கள் அனைவருடைய ஏகோபித்த ஆதரவோடு, உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் ஆட்சிப் பொறுப்பேற்ற” பிறகு என்று இருப்பதைத் தெளிவாக படிக்க முடியவே, பலராலும் அந்த பகுதியை மட்டும் அகற்றிவிட்டு படத்தையும் தலைப்பையும் மட்டும் ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது, மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து வைத்தார் என்று படம் பகிரப்பட்டுள்ளது. தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ தூத்துகுடி பெரியசாமி என்று முழுவதும் தி.மு.க நிர்வாகிகள் நிற்கின்றனர். ஆலை திறப்பு விழா படம் போல இல்லை. எனவே, இந்த படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் இந்து நாளிதழில் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது, 2009ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இந்த புகைப்படத்தை தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: Search Link I thehindu.com I Archive I facebook I Archive 2

ராமனூத்து சமத்துவபுரத்தை துணை முதல்வர் திறந்து வைத்தார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை தி இந்து புகைப்பட கலைஞர் என்.ராஜேஷ் எடுத்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனவே, இது ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விழா படம் இல்லை என்பது உறுதியாகிறது.

இதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் ராமனூத்தில் உள்ள சமத்துவபுரத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் போது எடுத்த படத்தை ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்த படம் என்று விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. அதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் சமத்துவபுரம் திறப்பு விழா படத்தை ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விழா படம் என்று தவறாக விஷமத்தனமாக பகிர்ந்திருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று பகிரப்படும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False