FACT CHECK: சாதி ஒடுக்குமுறை காரணமாக பெண் மீது தாக்குதல்- வீடியோ உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் என்பதால் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

வீடியோவில், பெண் மற்றும் மாற்றுத் திறனாளி என இரண்டு பேரின் தலை மொட்டையடிக்கப்பட்டு, முகத்தில் கறுப்பு மை பூசப்பட்டு, செருப்பு மாலை மாட்டப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். நிலைத் தகவலில், “சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் கொரோனா வந்து மொத்த இந்தியாவையும் அழிக்கட்டும். வட இந்திய சாதி வெறிபிடித்த காட்டு மிராண்டிகள். ராமராஜ்ஜியத்தில் தினம் தினம் நடக்கும் தலித் ஒடுக்குமுறை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை Ishanth Prasanna என்பவர் 2020 ஆகஸ்ட் 26 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

வட இந்தியாவில் பெண் ஒருவர் தாக்கப்பட்டாலே அது சாதிக் கொடுமை என்ற வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. பெண் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றாலும், அதன் பின்னணியைத் தெரிந்து கொள்ள ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2020 ஆகஸ்ட் 26, 27ம் தேதிகளில் இந்த வீடியோ மற்றும் புகைப்படத்துடன் வெளியான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன.

இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி ஊடகத்தில் வெளியான செய்தியைப் படித்துப் பார்த்தோம். அதில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது என்று கூறப்பட்டு இருந்தது. 

அசல் பதிவைக் காண: ndtv.com I Archive 1 I hindustantimes.com I Archive 2

அந்த பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வராத நிலையில், மாற்றுத் திறனாளி நபர் அந்த பெண்ணின் குழந்தையை வளர்க்க உதவியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளனர்.

மாற்றுத் திறனாளியுடன் அந்த விதவை பெண் ஒரே வீட்டில் வசித்து வந்ததற்கு, இறந்து போன கணவாின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த ஆகஸ்ட் 26ம் தேதி புதன் கிழமை காலையில் கணவனின் உறவினர்கள் வந்து விதவை பெண் மற்றும் மாற்றுத் திறனாளியைத் தாக்கியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பெண்ணின் உறவினர்கள் 2 பேரைக் கைது செய்துள்ளனர். வீடியோவில் உள்ள நபர்களைத் தேடி வருகின்றனர்” எனக் கூறப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive 1 I mid-day.com I Archive 2

இந்துஸ்தான் டைம்ஸ் மட்டுமின்றி என்.டி.டி.வி, மிட்டே உள்ளிட்ட ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி இருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இறந்த அந்த பெண்ணின் கணவனின் சகோதரர் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் அவர்கள் அனைவருமே தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம், சாதி பிரச்னை காரணமாக அந்த பெண் தாக்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

குடும்ப பிரச்னை காரணமாக குடும்பத்தினரே அந்த பெண்ணை தாக்கியது உறுதியாகிறது.

குடும்ப பிரச்னை காரணமாக பெண் தாக்கப்பட்ட விவகாரத்தை சாதி பிரச்னையாக மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் வட இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்பதால் பெண் தாக்கப்பட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், குடும்ப பிரச்னை காரணமாக பெண் ஒருவரை உறவினர்கள் தாக்கியதை தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை என்ற வகையில் தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நடத்திய ஆய்வில் உறுதியாகி உள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சாதி ஒடுக்குமுறை காரணமாக பெண் மீது தாக்குதல்- வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •