
பிரபல பிராண்ட் மசாலாவில் ஆண்மைக் குறைவு மருந்து கலக்கப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரபல பிராண்ட் மசாலா பாக்கெட் படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆச்சி மசாலா யாரும் வாங்க வேண்டாம் ஆண்மை குறைவு மருந்து கலக்கபடுகிறது… கையுடன் பிடித்த அதிகாரிகள்… கீலே உள்ளவர்கள் கலப்படம் செய்து மக்களை கெடுக்கும் தேசவிரோதிகளை கைதுசெய்து கீலே உட்கார வைத்து உள்ளனர்.. ஆச்சி மசாலா ஆபத்து.. வாங்காதீர்கள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Mahendran Bjp என்பவர் 2020 அக்டோபர் 21ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரபல மசாலா நிறுவனத்தின் தயாரிப்பில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனமே இதைச் செய்வது போலவும், முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்தினர் கைது செய்யப்பட்டது போலவும் பதிவு உள்ளது.
படத்தைப் பார்க்கும் போது சில வாரங்களுக்கு முன்பு மசாலா பாக்கெட்டுக்குள் போதை மருந்தை மறைத்து வைத்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் என்று கூறி வெளியான புகைப்படம் போலவே உள்ளது. ஏற்கனவே வெளிநாட்டுக்கு போதை மருந்து கடத்த முயன்ற மசாலா நிறுவனம் என்ற வகையில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது. அது தவறான தகவல் என்று உறுதி செய்திருந்தோம்.
இந்த நிலையில் மசாலாவுடன் ஆண்மைக் குறைவு மருந்து கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

இவர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தான் என்பதை உறுதி செய்ய சுங்கத் துறை ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில், ஆஸ்திரேலியாவுக்கு போதை மருந்து கடத்தியது தொடர்பாக நான்கு பேர் பிடிபட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் இல்லை.
எனவே, நான்கு பேர் கைது செய்யப்பட்டு தரையில் அமர வைக்கப்பட்டு இருக்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு போதை மருந்தைக் கடத்த முயன்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் இவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஸீ உள்ளிட்ட ஊடகங்களுடன் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: zeenews.india.com I Archive
தொடர்ந்து தேடியபோது சென்னையில் உள்ள பி.ஐ.பி அலுவலகம் கூட இந்த படத்துடன் ட்வீட் பதிவு வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், “சென்னை விமான நிலைய சுங்கத்துறை: மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg சூடோஎஃபிட்ரின் எனப்படும் போதைப்பொருளை கூரியர் முனையத்தில் NDPS சட்டப்படி கைப்பற்றியது. பிரதான குற்றவாளியுடன் 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் பிடிபட்டது” என்று கூறப்பட்டு இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு போதை மருந்து கடத்திய கும்பலை சென்னை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்த படத்தை வைத்து, ஆச்சி மசாலாவில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்படுகிறது என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக ஆச்சி மசாலா நிறுவனத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய நிறுவனத்தின் உயர் அதிகாரி, “யாரோ எங்கள் மசாலா பொருட்களை வாங்கி அதில், ரகசியமாக போதை மருந்தைக் கலந்து வெளிநாட்டுக்கு கடத்தினால் நாங்கள் என்ன செய்ய முடியும். எங்கள் பிராண்ட் பெயரைத் தவறாக பயன்படுத்துவதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளோம். ஆனாலும், தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன” என்றார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
போதை மருந்து கடத்தல் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், பிரபல மசாலா நிறுவனத்துக்கு சிக்கல் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பிரபல பிராண்ட் மசாலாவில் ஆண்மைக் குறைவு மருந்து கலக்கப்படுவதாக வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
