இலங்கையை ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

இலங்கையை தமிழ்நாட்டுடன் இணைத்து ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

செய்தியாளர் செந்தில் வேல் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !!

அசாதாரண சூழ்நிலையில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு ஒரே தீர்வு,தலைமன்னாரை தாண்டி இருக்கும் தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவர் ஸ்டாலினின் அதிகாரத்தின் கீழ் இலங்கையை கொண்டுவர வருவதே !!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Suriya என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 11ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருபவர் செந்தில்வேல். அதனால் அவருக்கு எதிராக தொடர்ந்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அவருடைய பெயரில் போலியாக ட்விட்டர் பக்கத்தைத் தொடங்கி, விஷமத்தனமான பதிவுகளை அதில் வெளியிட்டு வருகின்றனர். பின்னர் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து செய்தியாளர் செந்தில் கூறிவிட்டார் என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட இதர சமூக ஊடகங்களில் அதை பகிர்ந்து மகிழ்ச்சி அடைவது சிலருக்கு வேலையாக இருந்து வருகிறது.

உத்தரப்பிரதேச தேர்தலில் பிரசாரம் செய்யப் போவதாகவும், அங்கு மீண்டும் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றால் கங்கையில் விழுந்து உயிரிழப்பேன் என்று செந்தில்வேல் கூறியதாக வதந்தி பரப்பப்பட்டது. தொடர்ந்து விஷமத்தனமான வதந்திகள் செந்தில்வேல் பெயரில் வெளியிடப்பட்டு வருகிறது. அது அவருடைய ட்விட்டர் பக்கம் இல்லை என்று தெரியாமல் பலரும் அதை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. 

மீண்டும் செந்தில்வேல் பெயரில் ட்வீட் வைரலாக பகிரப்பட்டு வருவதால் அது பற்றி ஆய்வு செய்தோம். இந்த ட்வீட்டின் முகவரியை பார்த்தோம். அதில் “@Senthillvel79” என்று இருந்தது. Senthil (செந்தில்) என்பதில் கூடுதலாக ஒரு L சேர்த்து இந்த ட்வீட் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மேலும் முகப்பு பக்கத்தில் “Sarcasm” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட் பதிவும் இருந்தது. யாரோ ஒரு விஷமி நையாண்டி செய்ய உருவாக்கி வெளியிடும் பதிவை பலரும் செந்தில்வேல் பதிவு என்று பகிர்ந்து, அவரை விமர்சித்து வருகின்றனர். 

https://twitter.com/Senthillvel79/status/1524050995113648130

Archive

செந்தில்வேலின் உண்மையான ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதன் ட்விட்டர் முகவரி @Senthilvel79 என்பதாகும். செந்தில்வேல் மட்டுமல்ல பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதி, காயத்ரி ரகுராம் என பலரின் பெயரில் போலியான ட்விட்டர் அக்கவுண்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இப்படியான போலியான ட்வீட் அக்கவுண்ட்களை ட்விட்டர் நிறுவனம் பிளாக் செய்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற போலிகளை தவிர்க்க முடியும். 

நம்முடைய ஆய்வில் இந்த ட்வீட்டை செந்தில்வேல் வெளியிடவில்லை. அவர் பெயரில் யாரோ விஷமிகள் வெளியிட்டுள்ளார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

இலங்கையை ஸ்டாலின் ஆட்சியின் கீழ் இணைக்க வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறியதாக பரவும் ட்வீட், உண்மையில் அவர் வெளியிட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இலங்கையை ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False