
‘’பாலியல் குற்றவாளி திருமாவளவனை, பொதுமக்கள் புரட்டி எடுத்தனர். அந்த காயம்தான் இது,’’ எனக் கூறி, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

23, அக்டோபர் 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’திருமாவளவன் அரசு அதிகாரியாக பணிபுரிந்தபோது, தன்னிடம் உதவி கேட்டு வந்த தலித் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதன்பேரில், உள்ளூர் மக்கள் அவரை புரட்டி எடுத்துவிட்டனர். அந்த காயம் இன்றளவும் அவரது முகத்தில் உள்ளது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில் ஒரு விசயம், இந்த புகைப்படத்தில் இருக்கும் இளம்பெண்ணுக்கும், திருமாவளவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த புகைப்படத்தில் இருக்கும் இளம்பெண், 2019ம் ஆண்டு கோவையில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக, தனது குழந்தையை விஷ பிஸ்கெட் கொடுத்துக் கொன்ற புகாரில் கைது செய்யப்பட்டவர் ஆவார். இதுபற்றி ஊடகங்களிலும் அப்போதே செய்தி வெளியாகியுள்ளது.

Screenshot: Asianet Tamil story on the murder case
Asianet Tamil News Link | Archived Link |
Maalaimalar News Link | Archived Link |
Dinamani News Link | Archived Link |
அதேசமயம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அரசியலுக்கு வரும் முன்பாக, 1988ம் ஆண்டில் மதுரையில் அரசு தடயவியல் துறையில் அலுவலராகப் பணிபுரிந்தவர் ஆவார். அவரது அரசியல் செயல்பாடுகள் காரணமாக, பணியில் இருந்து 1997ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பிறகு, தேர்தலில் போட்டியிடுவதற்காக, 1999ம் ஆண்டில் அவரே அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டார்.
ஆனால், 2019ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய பெண் குற்றவாளியின் புகைப்படத்தை, 30 ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியராக பணிபுரிந்த திருமாவளவனுடன் இணைத்து, அடிப்படை ஆதாரமின்றி முன்னுக்குப் பின் முரணான தகவலை பரப்பியுள்ளனர்.
இருந்தாலும், கூடுதல் ஆதாரத்திற்காக, நமது ஃபேக்ட் கிரஸண்டோ குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னாவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர்.
இந்த தகவலை கேட்ட அவர், ‘’திருமாவளவன் முகத்தில் காயங்களுடன் நிற்பது போன்ற புகைப்படம் 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும். அப்போது, தாமிரபரணி படுகொலை நினைவு தினத்தில் பங்கேற்பதற்காக, தருமபுரியில் இருந்து மதுரைக்குக் காரில் செல்லும்போது திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்தது.
இதில், காயமடைந்த திருமாவளவன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். பிறகு, அவ்வழியே வந்த கார் லாரியில் ஏறிச் சென்று, மதுரையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதைக் கேள்விப்பட்டதும், முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் ஜி.கே.மூப்பனார், திருமாவளவனை சென்னைக்கு அனுப்பி வைத்து, மலர் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற உதவினார். இதனை வைத்து இப்படி தவறான வதந்தியை சிலர் வேண்டுமென்றே அரசியல் நோக்கத்திற்காக பகிர்ந்து வருகின்றனர்,’’ என்று தெரிவித்தார்.
எனவே, அடிப்படை ஆதாரமின்றி வேண்டுமென்றே திருமாவளவன் மீது வதந்தி பரப்பும் விதமாக இந்த தகவலைச் சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் பகிர்ந்து வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இது தவறான தகவல் என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பாலியல் புகார் காரணமாக திருமாவளவன் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False
