சிறுவர்கள் குரான் ஓதும் வீடியோ உலகக் கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் எடுக்கப்பட்டதா?

சமயம் சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க விழாவின் போது சிறுவர்கள் குரான் ஓதும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வெள்ளை ஆடை அணிந்த சிறுவர்கள் ஓடிவரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த சிறுவர்கள் அமர்ந்து குரான் ஓதுகின்றனர். பெரியவர் ஒருவர் அவர்களுக்கு குரான் ஓத கற்றுக்கொடுப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. வீடியோவில், “At the Inauguration of the World Cup Al Thumama stadium” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “கட்டார் FIFA 2022 இனது அங்குரார்ப்பன நிகழ்வுகளில் நடந்த மிகவும் அருமையான காட்சி. சிறார்களை கொண்டு அல்குர்ஆன் ஓதும் அழகான காட்சி !

இஸ்லாத்தின் விழுமியங்களை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடாது அதற்கு உரிய அந்தஸ்துகளை வழங்கி இஸ்லாத்தை மேம்படுத்துவதற்காக இந்த 2022 உலக கோப்பை போட்டியை கட்டார் பயன்படுத்தி இருக்கிறது. இஸ்லாத்தின் முக்கிய பல சட்ட திட்டங்களுக்கும் அதன் சவால்களுக்கும் முகம் கொடுத்து கொண்டுதான் இந்த பீபா (FIFA )உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகிறது. அந்த வகையிலே கட்டாரை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும்.

கட்டாரின் வீதி எங்கும் நபிமொழிகளும் அல்குர்ஆன் வசனங்களும் சொரிந்து சொரிந்து காணப்பட்டு இஸ்லாத்தை அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களில் மிகவும் அழகாக அதான் சொல்லும் இமாம்களை நியமித்து இருக்கிறார்கள். பல மியூசியங்கள் திறக்கப்பட்டிருக்கிறது இவை அனைத்தும் கட்டார் விளையாட்டு மூலமாக இஸ்லாத்தை விளங்கப்படுத்துவதற்கான முயற்சியையும் எடுத்து இருக்கிறது என்பது பாராட்டத்தக்க விடயமே என்பது முழு உலக நாடுகளின் உறுதிப்பாடு.

அந்த வகையில் துபாய் ( ஐக்கிய அரபு இராஜியம் ) போன்ற வேறு அரபுலக முஸ்லிம் நாடுகளோடு ஒப்பிடுகையில் கட்டார் இஸ்லாத்தின்பால் செயல்படுகிறது என்றே சொல்ல நாம் யாவரும் கடமைப்பட்டிருக்கிறோம் ! அதற்கு நாம் இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்வோம்!!!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை Careem Naleem என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 நவம்பர் 19ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடந்து வருகிறது. இஸ்லாமிய நாடான கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதன் மூலம் இஸ்லாத்துக்குப் புகழ் சேர்த்துவிட்டதாகப் பலரும் பல வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சிறுவர்கள் குரான் ஓதும் அழகான காட்சி என்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது. 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உலகக் கோப்பை நடைபெற உள்ள மைதானத்தின் தொடக்க விழா என்று குறிப்பிட்டுள்ளனர். அப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில் இதை உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்கள் என்று புரியவில்லை. எனவே, இந்த வீடியோ உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க விழாவில் எடுக்கப்பட்டதா இல்லையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2021ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அவற்றில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக புதிதாகக் கட்டப்பட்ட அல் துமாமா (Al Thumama) மைதானத்தின் தொடக்க விழா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் தோஹா நியூஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, தோஹா நியூஸ், அல் துமாமா, தொடக்க விழா என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது தோஹா 2021 அக்டோபர் 24ம் தேதி வெளியிட்ட உண்மையான வீடியோ கிடைத்தது. அதில் அல் துமாமா மைதானம் தொடக்க விழா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

அல் துமாமா மைதானம் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை மாற்றி அல் துமாமா மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடக்க விழாவின் போது எடுக்கப்பட வீடியோ என்று மாற்றி தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவானது. இதன் அடிப்படையில் உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து இந்த வீடியோ பதிவு பகிரப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அல் துமாமா மைதானம் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை உலகக் கோப்பை கால் பந்து தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை  தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சிறுவர்கள் குரான் ஓதும் வீடியோ உலகக் கோப்பை கால்பந்து தொடக்க விழாவில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False