இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

அறிவியல் சமூக ஊடகம் சர்வதேசம்

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தோனேஷியா கடலுக்கு அடியில்* *எரிமலை வெடித்த காட்சி. 💥 மொபைல்* *இருட்டியபின் 15 வினாடி காத்திருக்கவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வீடியோ பதிவை Saravanan Ramanujadasan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 நவம்பர் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும் எரிமலை வெடிப்பதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அந்த வீடியோவை பார்க்கும் போது வீடியோகேம் வீடியோ போல இருந்தது. எனவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டது என்று சிலரும், நியூசிலாந்தில் எடுக்கப்பட்டது என்று ஒரு சிலரும் யூடியூபில் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. இதனால் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று அறிவதில் குழப்பம் ஏற்பட்டது.

உண்மைப் பதிவைக் காண: Youtube

தொடர்ந்து தேடிய போது, நியூசிலாந்தில் உள்ள ஆக்லன்ட் (Auckland) நகரின் அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கிய செயற்கையான வீடியோ என்று ஒரு யூடியூப் வீடியோ கிடைத்தது. அதன் அடிப்படையில் தேடிய போது ஆக்லன்ட் நகரின் அருங்காட்சியகம் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காக 3டி முறையில் உருவாக்கிய நீருக்கு அடியில் இருந்து வெளிப்படும் எரிமலை பாதிப்பு வீடியோ என்று குறிப்பிட்டு வேறு சிலரும் இதைப் பகிர்ந்திருந்தனர். 

அந்த அருங்காட்சியகத்தின் இணையதள பக்கத்தை பார்வையிட்டோம். அதில் எரிமலையுடன் வாழப் பழகுவோம் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதில் இந்த வீடியோவை அவர்கள் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

அதே நேரத்தில் நியூசிலாந்தின் Whakatane என்ற பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டபோது, அதன் நேரடி பதிவு என்று இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்தது தொடர்பாக நியூசிலாந்து ஊடகங்களில் வெளியான செய்தியும் கிடைத்தது. ஆக்லன்ட் அருங்காட்சியகம் உருவாக்கிய 3டி கிராஃபிக்ஸ் வீடியோவை எரிமலை வெடிப்பு ஏற்பட்டு பலரும் இறந்துள்ள சூழலில் பரப்பியது சரிதானா என்று நெட்டிசன்கள் கொந்தளித்ததாக அந்த செய்திகளில் குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்திருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: stuff.co.nz I Archive 1 I nzherald.co.nz I Archive 2

இதன் மூலம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நீருக்கு அடியில் உள்ள எரிமலையின் வெடிப்பு என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவின் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நியூசிலாந்தின் அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கிய கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் எரிமலை வெடிப்பு வீடியோவை இந்தோனேஷியாவில் ஏற்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False