
வட மாநில மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு தமிழர்களுக்கு அறிவில்லை என்பதால் நீட்டை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ரத்து செய்ய முடியாது. வடமாநில மாணவர்களுடன் போட்டியிடும் அளவிற்கு தமிழர்களுக்கு அறிவில்லை என்பதற்காக நீட்டை ரத்து செய்யமுடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இதற்கு தமிழக மாணவர்களுக்கு அறிவில்லை என்பதால்தான் ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எந்த சூழலிலும் இப்படி ஒரு கருத்தை எந்த தலைவரும் கூற மாட்டார் என்பதால் இது போலியாக இருக்கலாம் என்பதால் இது பற்றி ஆய்வு செய்தோம்.
நீட் தேர்வு தொடர்பாக நயினார் நாகேந்திரன் சமீபத்தில் கருத்து தெரிவித்தாரா என்று தேடிய போது, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அவர் பேட்டி அளித்திருப்பது தெரிந்தது. அதில் எந்த இடத்திலும் வட மாநில மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு தமிழர்களுக்கு அறிவில்லை என்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறவில்லை. அப்படி அவர் கூறியதாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை.
இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டிருப்பதைக் கண்டோம். அதில், “நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம்” என்று தான் இருந்தது. இதை எடிட் செய்து மாற்றி, தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவானது.

இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்துகொள்ள இதை புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது தவறானது, எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
“வட மாநில மாணவர்களுடன் போட்டியிடும் அளவிற்கு தமிழர்களுக்கு அறிவில்லை என்பதால் நீட்டை ரத்து செய்யமுடியாது” என்று நயினார் நாகேந்திரன் பேட்டி என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


