அடல் சுரங்கப்பாதைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்து அடித்துச் செல்லப்பட்டது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சுரங்கப் பாதைக்கு அருகே உள்ள பாலம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "விண்வெளி தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட அடல் சுரங்கத்துடன் கூடிய ரோடும் ஸ்வாஹா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடல் சுரங்கப்பாதை என்று குறிப்பிடாமல் இந்தியாவில் இந்த சம்பவம் நடந்தது போன்று வேறு பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அடல் சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இதை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதைக்கு அருகே இருந்த பாலம் இடிந்து விழுந்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சாலைகள் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக முன்பு வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதன் அடிப்படையில் விண்வெளி தொழில்நுட்பத்தால் அமைக்கப்பட்ட பாலம் ஸ்வாஹா என்று பலரும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த பாலம் சுரங்கப்பாதை பாலம் இந்தியாவில் உள்ளா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இந்தியாவில் அடல் சுரங்கப்பாதை அருகே இந்த சம்பவம் நடந்ததாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் 2023ம் ஆண்டில் இருந்து இந்த வீடியோவை பல நாட்டினரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.

சில பதிவுகளில் இந்த சம்பவம் துருக்கி நாட்டில் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். துருக்கி நாட்டில் ஒர்து (Ordu) என்ற ஊரில் கருங்கடல் மத்திய தரைக்கடல் (Black Sea-Mediterranean Road) சாலையில் Darıcabaşı என்ற பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதைக்கு அருகில் உள்ள பாலம் இடிந்த விழுந்தது என்று சில செய்திகள் நமக்குக் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: ntv.com.tr I Archive 1 I gauchazh.clicrbs.com.br I Archive 2 I haberler.com I Archive 3

இந்த வீடியோவை பல ஊடகங்களும் 2023ம் ஆண்டு வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது. ஒர்து பகுதியில் ஏராளமான சுரங்கங்கள் இருந்ததால் எந்த சுரங்கம் என்று தேடுவது கடினமாக இருந்தது. Darıcabaşı என்ற பகுதியில் நடந்தது என்று செய்தியில் குறிப்பிட்டிருந்ததால், ஒர்து நகரில் Darıcabaşı என்ற பகுதி எங்கு உள்ளது என்று தேடிப் பார்த்தோம். ஆனால் அந்த பகுதியில் கூகுள் ஸ்ட்ரீட் மேப் இல்லாததால் அந்த சுரங்கப் பாதையை நம்மால் கண்டறிய முடியவில்லை.

இந்த பாலம் இடிந்த விழும் வேறு சில வீடியோக்களும் நமக்கு கிடைத்தன. அதில் உள்ள சுரங்கப்பாதையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட சுரங்கப்பாதையும் ஒன்றாக இருப்பதை காண முடிந்தது. அதிலும் இந்த சம்பவம் துருக்கியில் நடந்தது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. நம்முடைய தேடலில், துருக்கியின் ஒர்து பகுதியைச் சார்ந்தவர் இந்த வீடியோ ஒர்துவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்த இன்ஸ்டா பதிவும் நமக்கு கிடைத்தது. இவை எல்லாம் இந்த சம்பவம் இந்தியாவில் நடந்தது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.

உண்மைப் பதிவைக் காண: Instagram

சாி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட சுரங்கப் பாதையை அடல் சரங்கப் பாதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று அடல் சுரங்கப் பாதை படத்தை கூகுளிலிருந்து எடுத்தோம். நாம் ஆய்வுக்கு வீடியோவில் இருந்த சுரங்கம் அரை வட்ட வடிவில் இருந்தது. ஆனால், அடல் சுரங்கப்பாதை செவ்வக வடிவத்திலிருந்தது. மேலும் அதன் தொடக்கம், முடிவு என இரண்டு பகுதியிலும் அடல் சுரங்கப்பாதை என்று பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. இதன் மூலம் இந்த சுரங்கப்பாதை அடல் சுரங்கப்பாதை இல்லை என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: Google Map

நம்முடைய ஆய்வில் பாலம் உடைந்து விழுந்த இடம் துருக்கி என்று 2023ம் ஆண்டு வெளியான செய்தி மற்றும் வீடியோ பதிவுகள் நமக்குக் கிடைத்துள்ளன. மேலும், அடல் சுரங்கப்பாதைக்கும் இந்த வீடியோவில் உள்ள சுரங்கப்பாதைக்கும் துளி கூட உருவ ஒற்றுமை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அடல் சுரங்கப்பாதை அருகே அமைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது என்று பரவும் வீடியோ துருக்கியில் 2023ல் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அடல் சுரங்கப்பாதை பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False