நீட் தேர்வு ஆதரவு புத்தகம் வெளியிட்டாரா சூர்யா?- முழு விவரம் இதோ!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

நீட் தேர்வை ஆதரித்து நடிகர் சூர்யா மற்றும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு ஆகியோர் புத்தகம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நடிகர் சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் புத்தகம் ஒன்றை வெளியிடும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சூர்யாவும் நீதிபதி சந்துறுவும் 2017இல் #நீட்_புக்கு லாஞ்ச் செய்யும் போது.. மறந்துட்டான் அவன் சைஸ்க்கு யார் கண்லயும் படமாட்டோம்னு நெனைச்சிட்டான் போல.

டக்கு டக்குனு எல்லா க்ருப்லையும் ஷேர் பன்னிடுங்க.. போறாலீஸ் கதறலை கேப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை All India BJP- Tamilnadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் M.J. Raman என்பவர் 2020 செப்டம்பர் 15 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நீட் தேர்வு தொடர்பான புத்தகத்தை சூர்யா வெளியிட்டது உண்மைதான். ஆனால் அந்த புத்தகம் நீட் தேர்வை ஆதரிக்கின்றதா, எதிர்க்கின்றதா என்பதைக் கூட தெரிந்துகொள்ளாமல், நீட் தேர்வுக்கு நடிகர் சூர்யா ஆதரவு தெரிவித்து புத்தகம் வெளியிட்டது போன்ற தோற்றத்தை சமூக ஊடகங்களில் சிலர் உருவாக்கியுள்ளனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாம், அவரது உயரத்தை விமர்சித்து தரம் தாழ்ந்து பதிவிட்டிருந்தது வேதனை அளித்தது.

அது என்ன புத்தகம், அந்த புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பற்றித் தேடினோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, 2017ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இந்த புத்தக வெளியீட்டு விழா நடந்திருப்பது தெரிந்தது. “நீட் தேர்வு சவால்களும்… பயிற்று மொழி சிக்கல்களும்” என்பது நூலின் பெயர்.

அது நீட் தொடர்பாக வெளியான பல கட்டுரைகளின் தொகுப்பு என்று விழா நடைபெற்றபோது மேடையிலிருந்த பேனரில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தொகுப்பை செய்தது பேராசிரியர் பிரபா கல்விமணி என்றும் அதிலிருந்தது.

hindutamil.inArchived Link

இதன் அடிப்படையில் நம்முடைய தேடுதலைத் தொடங்கினோம். கூகுளில் தேடிய போது, புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக நடிகர் சூரியாவின் சிறப்புக் கட்டுரையை இந்து நாளிதழ் 2017 செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், “இந்த ‘நீட்’ தேர்வு மட்டுமே நமது கல்வி முறையின் ஒற்றைப் பிரச்சினை இல்லை. பல்வேறு குறைபாடுகள் கொண்ட நம் கல்விமுறையின் சமீபத்திய பலி அனிதா என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ அனிதாக்கள் இருக்கிறார்கள். 2017 ஜனவரி மாதம் அகரம் ஃபவுண்டேஷன் சார்பாக ‘நீட்’ தேர்வு பற்றிக் கல்வியாளர், பேராசிரியர் பிரபா கல்விமணி (பேராசிரியர் கல்யாணி) தொகுத்த புத்தகத்தை அகரம் ஃபவுண்டேஷன் வெளியிட்டது. ‘நீட்’ பற்றியும் தமிழகக் கல்விச் சூழல் பற்றியும் அவசரமாக விவாதிக்க வேண்டிய விஷயங்களைக் குறிப்பிட்டுத் தமிழகக் கல்வியாளர்களின் கருத்துக்களைத் தொகுத்து அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது” என்று சூர்யா குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் இது நீட் தேர்வை வரவேற்கும் புத்தகம் இல்லை என்பது உறுதியானது.

இது தொடர்பாக புதுயுகம் வெளியிட்ட நிகழ்ச்சி வீடியோவும் கிடைத்தது. அதில், “ஒரு படம் வெளியான பிறகு ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. அதே நேரத்தில், 25 லட்சம் மாணவர்கள் ஆரம்பக் கல்வியில் சேருகிறார்கள். இதில், பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் கூட இல்லை. நிறைய இடை நிறுத்தல் உள்ளது. நிறையபேர் பின் தள்ளப்படுகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2800 இடங்களில் 60 சதவிகித இடங்கள் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களால் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவர்களால் மருத்துவப் படிப்பு மேற்கொள்ள முடியவில்லை. 2, 3 சீட்தான் வருஷத்துக்கு கிடைக்கிறது என்றால் ஏன் என்ற பல கேள்விக் குறிகள் உள்ளன. ஏன் அமைதியாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

இதன் மூலம் இந்த பதிவில் கூறியுள்ளது போல் நீட் தேர்வை ஆதரித்து சூர்யா, நீதிபதி சந்துரு புத்தகம் வெளியிடவில்லை என்பது உறுதியானது.

senkodi.wordpress.comArchived Link

இந்த புத்தகத்தின் பி.டி.எஃப் பதிப்பு கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது senkodi.wordpress.com என்ற தளத்தில் நமக்கு புத்தகத்தின் பி.டி.எஃப் கிடைத்தது. அதை பதிவிறக்கம் செய்து படித்துப் பார்த்தோம். பொருளடக்கத்தில் நீதிபதி சந்துரு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் டாக்டர் ரவீந்திரநாத் உள்ளிட்டவர்கள் நீட் தேர்வு தேவையில்லை என்று வெளியிட்ட கட்டுரைகள் அதில் இருப்பதை காண முடிந்தது. அதைத் தாண்டி வந்தால், ஏன் இந்த வெளியீடு என்று மிக விரிவாக நீட் தேர்வு பற்றிய கருத்தை சூர்யா முன் வைக்கிறார். 

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்தும் புத்தகத்தை சூர்யா வெளியிட்ட படத்தை வைத்துக் கொண்டு, நீட் தேர்வுக்கு ஆதரவாக நடிகர் சூர்யாவும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துருவும் புத்தகம் வெளியிட்டதாக விஷமத்தனமான கருத்தை பகிர்ந்து வந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:நீட் தேர்வு ஆதரவு புத்தகம் வெளியிட்டாரா சூர்யா?- முழு விவரம் இதோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False