
சென்னையில் வீட்டுக்குள் தேங்கிய மழை நீரில் பெண் ஒருவர் நீச்சல் கற்றுக்கொள்வது போன்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
வட இந்தியர் போல தோற்றம் அளிக்கும் பெண் ஒருவர், வீட்டில் தேங்கிய மழை நீரில் நீச்சல் அடிக்க அவரது கணவர் பயிற்சி அளிப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வீட்டுக்குள் நீச்சல் பழக வழிவகை செய்த விடியாத அரசு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை மேச்சேரி ரமேஷ் அஇஅதிமுக என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 9ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த தம்பதியைப் பார்க்கும்போது தமிழர்கள் போல இல்லை. வீடியோ மிகப் பழையது போல தெளிவின்றி இருந்தது. சென்னையில் எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. இவை எல்லாம் இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதாக இருக்காது என்பதை உறுதி செய்தன. விடியாத அரசு என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் விடியல் தரப் போகிறோம் என்று சட்டமன்ற தேர்தலின் போது பிரசாரம் செய்து வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசைக் குறிப்பிடுகிறார்கள் என்பதால் இந்த வீடியோ தற்போது, தமிழகத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. இவற்றுக்கு இடையே உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்ஜில் எடுக்கப்பட்டதாக யூடியூபில் வீடியோ ஒன்று கிடைத்தது. 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்த ஆண், பெண் இருவரும் இருந்தனர். ஆனால் அந்த பெண்மணி நீல நிற புடவை அணிந்திருந்தார்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது, வேறு ஒரு இந்தி ஊடகம் நாம் ஆய்வுக்கு எடுத்திருந்த அந்த வீடியோவை வைத்து செய்தி வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இந்த வீடியோ 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
அசல் பதிவைக் காண: patrika.com I Archive
இதே வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் எடுக்கப்பட்டதாக, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலப் பிரிவு சார்பில் இந்த வீடியோ பிரயாக்ராஜ் நகரில் எடுக்கப்பட்டது என்று உண்மை கண்டறியும் சோதனை வெளியிட்டிருப்பதும் தெரியவந்தது. அந்த கட்டுரையை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம் இந்த வீடியோ 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
சென்னையில் வீட்டுக்குள் தேங்கிய மழை நீரில் பெண் ஒருவர் நீச்சல் கற்பது போல் பகிரப்படும் வீடியோ உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சென்னையில் வீட்டுக்குள் தேங்கிய வெள்ள நீரில் நீச்சல் கற்கும் பெண்- வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
