FACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

லட்சத்தீவில் மதுக்கடையைத் திறக்க அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த வானதி ஶ்ரீனிவாசன், கே.அண்ணாமலை போராட்டம் நடத்தியது போன்று படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

வானதி ஶ்ரீனிவாசன் மற்றும் கே.அண்ணாமலை ஆகியோர் கையில் பேப்பர் ஒன்றை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடி அரசே லட்சத்தீவில் டாஸ்மாக் கடையை திறக்காதே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Hakkim A என்பவர் 2021 ஜூன் 13ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ் நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலிலிருந்த போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க போராட்டம் நடத்தியது. அதே பாணியில் இந்த ஆண்டு, தங்கள் வீட்டு வாசலிலேயே தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பான படங்களை சிலர் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், லட்சத்தீவில் டாஸ்மாக் கடைகளைத் திறக்காதே என்று மோடியை வானதி ஶ்ரீனிவாசனும், முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலையும் கேட்டுக்கொண்டது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. டாஸ்மாக் என்று தமிழ்நாடு அரசின் மது கொள்முதல், விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்த புரிதல் கூட இன்றி படம் எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. எனவே, வானதி ஶ்ரீனிவாசன் மற்றும் கே.அண்ணாமலை ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களில் வெளியான அசல் படங்களை எடுத்தோம்.

வானதி ஶ்ரீனிவாசன் வைத்திருந்த பேப்பரில், “தமிழக அரசே டாஸ்மாக்கை திறக்காதே” என்று எழுதப்பட்டு இருந்தது.

Archive

அண்ணாமலை பிடித்திருந்த பேப்பரில், “தமிழக அரசே டாஸ்மாக்கை திறக்காதே” என்றும் “TN Govt say No to TASMAC, Dont play with the life of common people” என்று எழுதப்பட்டு இருந்தது. 

Archive

வானதி ஶ்ரீனிவாசன் மற்றும் அண்ணாமலை வெளியிட்ட படங்களை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. நம்முடைய ஆய்வின் போது, பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவர் வைத்திருந்த பேனர் பற்றி சமூக ஊடகங்களில் படம் ஒன்று வைரல் ஆகி வருவது பற்றி அண்ணாலை வெளியிட்டிருந்த ட்வீட் கண்ணில் பட்டது.

அவர் யார், எந்த ஊர் என்ற விவரத்தை வெளியிடவில்லை. ஆனால், அவர் வைத்திருந்த பேனரை தி.மு.க-வினர் எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அசல், எடிட் செய்யப்பட்டத்தை ஒப்பிட்டு அவர் பகிர்ந்திருந்தார். அதே நேரத்தில் அந்த பெண்ணின் உண்மையான எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.

Archive

இதன் மூலம் லட்சத்தீவில் மத்திய அரசு மதுக்கடைகளைத் திறப்பதைக் கண்டித்து வானதி, அண்ணாமலை போராட்டம் நடத்தியதாக பகிரப்படும் படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

லட்சத்தீவில் மத்திய அரசு மதுக் கடைகளை திறப்பதை கண்டித்து வானதி ஶ்ரீனிவாசன், அண்ணாமலை போராட்டம் நடத்தியதாக பகிரப்படும் படங்கள் எடிட் செய்யப்பட்டவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter

Avatar

Title:லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered