மாநாடு படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிம் என்பவர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். - வேலூர் இப்ராஹிம் (பாஜக). தற்கொலை எங்கள் மார்க்கத்திற்கு எதிரானது. இஸ்லாமிய இளைஞர் மீண்டும் மீண்டும் தற்கொலை செய்வது போல் காட்சி அமைத்துள்ளது. இது கண்டிக்கத் தக்கது, இந்த திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்" என்று இருந்தது.

இந்த பதிவை ஆத்துப்பாலம் ஆஷிக் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 26ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வெளியானது. இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என்று கூறி இந்த படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று பா.ஜ.க-வின் சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கேட்டதாக நியூஸ் கார்டு ஒன்றை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையில் இப்படி ஒரு கருத்தை பா.ஜ.க நிர்வாகி கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை வேலூர் இப்ராஹிம் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதிலும் அப்படி எந்த ஒரு கருத்தும் அவர் பதிவிடவில்லை. எனவே, குறிப்பிட்ட அந்த இணைய ஊடகத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் ஆய்வு செய்தோம்.

Archive

அப்போது, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று அவர்கள் பதிவு வெளியிட்டிருப்பது கிடைத்தது. "பொய் செய்திகளை நம்ப வேண்டாம்" என்று குறிப்பிட்டு, இந்த நியூஸ் கார்டு மீது "FAKE NEWS" முத்திரையுடன் பதிவிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

முடிவு:

மாநாடு திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மாநாடு படத்தை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False