ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும்படி மு.க.ஸ்டாலின் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆளுநர் மாளிகையை முற்றுகையிடக் கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களை கட்டயப்படுத்துகிறார். ஒரு சீட் கொடுத்தால் நாங்கள் உங்கள் அடிமையா?? – வேல்முருகன் வேதனை” என்று இருந்தது. 

இந்த பதிவை நத்தம் தொகுதி பாஜக என்ற ஐடி கொண்டவர் 2022 பிப்ரவரி 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டது. அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அதை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதற்கு பா.ஜ.க தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்களைக் கட்டாயப்படுத்தினார் என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நியூஸ் கார்டு பார்க்க புதிய தலைமுறை வெளியிட்டது போல உள்ளதால் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இதன் தமிழ் ஃபாண்ட், டிசைன், “கட்டாயப்படுத்துகிறார்” என்பதை “கட்டயப்படுத்துகிறார்” எனத் தவறாகக் குறிப்பிட்டது போன்றவை இது உண்மையான நியூஸ் கார்டு இல்லை என்பதை நமக்கு உறுதி செய்தன. ஆதாரங்கள் அடிப்படையில் இது போலியானது என்று உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் புதிய தலைமுறை இந்த நியூஸ் கார்டை வெளியிடவில்லை என்பதை உறுதி செய்ய, பிப்ரவரி 5, 2022 அன்று வெளியான நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று வேல்முருகன் புகைப்படத்துடன் கூடிய ஒரு நியூஸ் கார்டு இருந்து.

அதில், “சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை. ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதை கண்டித்து முற்றுகை போராட்டம்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து விஷமத்தனமான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்ய, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.

வேல்முருகன் இது போன்று கருத்தை வெளியிட்டாரா என்று பிப்ரவரி 5ம் தேதி வெளியான செய்திகளைப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, வேல்முருகன் எம்.எல்.ஏ-வின் உதவியாளர் காமராஜைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது. தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் இவ்வாறு கூறவில்லை என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களை கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும்படி மு.க.ஸ்டாலின் கட்டாயப்படுத்துகிறார் என்று வேல்முருகன் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False