
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மஞ்சள் சட்டை போட்டுக்கொண்டு எவனும் ரோட்டில் சுற்ற முடியாது, என்று வன்னியர்களை வேல்முருகன் மிரட்டியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் “மஞ்சள் சட்டை போட்டுக்கொண்டு எவனும் ரோட்டில் சுற்ற முடியாது” பண்ருட்டி பிரச்சார கூட்டத்தில் வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நிலைத் தகவலில், “ஒட்டுமொத்த வன்னியர்களின் எதிரி பண்ருட்டி வேல்முருகனை டெப்பாஸிட் இழக்க செய்வோம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நியூஸ் கார்டை செந்தில்குமார் மாவீரன் மாவட்டம் என்பவர் 2021 ஏப்ரல் 4ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேர்தலில் வாக்குகளைப் பெற அந்த தலைவர் அப்படி கூறினார், இந்த தலைவர் இப்படி சொன்னார் என்று நிறைய வதந்திகள் நியூஸ் கார்டு ரூபத்தில் வைரல் ஆகின. பிரபல தொலைக்காட்சிகள் வெளியிட்டது போலவே இருந்ததாலும் தங்கள் சாதிக்கு, ஆதரவு கட்சிக்கு வாக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இது போலியானது என்று தெரிந்துமே பலரும் வதந்திகளை பகிர்ந்து வந்திருப்பதை காண முடிந்தது.
அந்த வகையில் வன்னியர்கள் மஞ்சள் சட்டை போட்டுக்கொண்டு சாலையில் நடமாட முடியாது என்று பண்ருட்டி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேல்முருகன் மிரட்டினார் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. ஏராளமானவர்கள் இதை ஷேர் செய்யவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

நியூஸ் 18 தற்போது நியூஸ் கார்டுகளை வெளியிடுவது இல்லை. விளம்பரம் தொடர்பான போட்டோ கார்டுகளை மட்டுமே வெளியிட்டு வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று மயிலாப்பூரில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் கூறினார் என்று ஒரு வதந்தி பரவியது. அது உண்மையா என்று ஆய்வு செய்தபோது, செய்தி தொடர்பான நியூஸ் கார்டுகளை நியூஸ் 18 தமிழ் வெளியிடுவது இல்லை என்று தெரியவந்தது.
மேலும், கடைசியாக அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியபோது நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது என்றும் ஏப்ரல் 3ம் தேதி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் உண்மை கண்டறியும் ஆய்வு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இந்த சூழலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் ஏப்ரல் 1, 2021ம் தேதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த தேதியில் நியூஸ் 18 எந்த ஒரு நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை என்பது அதன் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தபோது தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்வதற்காக நியூஸ் 18 டிஜிட்டல் பிரிவு நிர்வாகி யுவராஜிடம் கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.
இந்த தகவல் தொடர்பாக வேல்முருகனைத் தொடர்புகொண்டோம். அவர் தரப்பில் பேசிய உதவியாளர் காமராஜ் “இது தவறானது. எந்த இடத்திலும் அப்படி அவர் கூறவில்லை. இது பற்றி ஏற்கனவே நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தோம். அவர்கள் இது போலியானது என்று அறிவிப்பு செய்தார்களா என்று தெரியவில்லை” என்றார்.
நியூஸ் 18 தமிழ்நாடு மற்றும் வேல்முருகன் தரப்பு என இருவரும் இது போலியானது என்று உறுதி செய்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வன்னியர்களை வேல்முருகன் மிரட்டினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:வன்னியர்களை மிரட்டினாரா வேல்முருகன்?– போலி நியூஸ் கார்டால் பரபரப்பு
Fact Check By: Chendur PandianResult: False
