சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கழித்து இப்போதுதான் அருணாச்சலில் விமான நிலையம் அமைக்கப்பட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகு, இப்போதுதான் அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அருணாச்சல பிரதேசத்தின் வரைபடம் மற்றும் விமானநிலையத்தின் விமான ஓடுபாதை ஆகிய படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து #அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் முதல் கிரீன்ஃபீல்ட் விமானநிலையம் அமைக்கப்பட்டுள்ளது… 

   காங்கிரஸ் அரசுகள் அனைத்தும் வடகிழக்கின் ஏழு சகோதரிகளான (seven sisters) அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கவலையே பட்டதில்லை …

   முன்னாள் இத்தாலிய கைக்கூலி கட்டுப்பாட்டில் இயங்கிய ரோபோ பிரதமரோ சீனாவின் மிரட்டலால் அருணாச்சலப்பிரதேசம் பக்கம் போகணும்னாவே யோசிச்சாரு … !

  பாரதத்தின் அனைத்து நல்ல நிகழ்வுகளும் யோகி மோடி ஜி தலைமையில் நடைபெற வேண்டும் என்பது கடவுளின் ஆணை.. அதை மாற்ற யாரால் முடியும்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை தமிழ் இனியன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 நவம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முறையாக இப்போதுதான் அருணாச்சல பிரதேசத்தில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மைதான். சமீபத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்தில் முதன் கிரீன் ஃபீல்ட் விமான நிலையத்தைத் திறந்து வைத்தார். ஆனால், ஏதோ இப்போதுதான் முதன் முறையாக அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் அருணாச்சல பிரதேசத்துக்கு விமான நிலையம் வந்திருப்பது போன்றும், முந்தைய ஆட்சியாளர்கள் அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைப் புறக்கணித்துவிட்டார்கள் என்பது போலவும் பதிவிட்டிருந்ததால் அது பற்றி ஆய்வு செய்தோம்.

கிரீன் ஃபீல்ட் என்பது கட்டிடக் கலையின் நவீன முன்னேற்றம் மட்டுமே. புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் வர வர கட்டிடக்கலை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் அருணாச்சல பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட விமான நிலையம் கிரீன் ஃபீல்ட் வகையில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம் போன்ற இடங்களில் விமான நிலையங்கள் உள்ளன. ஆனால் இன்னும் ஒரு கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ள கிரீன் ஃபீல்ட் விமானநிலையங்கள் பட்டியலில் தமிழ்நாடு இல்லவே இல்லை.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive

அருணாச்சல பிரதேசத்தில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன என்று தேடிப் பார்த்தோம். அப்போது, தற்போது திறக்கப்பட்ட விமான நிலையத்துடன் சேர்த்து நான்கு பயணிகள் விமான நிலையம் இருப்பது தெரிந்தது. மேலும் 1997ல் நிறுத்தப்பட்ட விமான சேவை கடந்த 2018ம் ஆண்டில் இருந்து அங்கு மீண்டும் தொடங்கப்பட்டதாக செய்திகளும் கிடைத்தன. இதன் மூலம் அங்கு பல ஆண்டுகளாக விமான நிலையங்கள் செயல்பட்டு வருவதை அறிந்துகொள்ள முடிந்தது.

இந்த புதிய இடாநகர் விமான நிலையம் கட்டுமானப் பணிகள் பற்றித் தேடினோம். அப்போது, கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த திட்டம் தொடங்கப்பட்டது தெரிந்தது. 2007ல் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் அடிக்கல் நாட்டினாராம். அதன் பிறகு, விமான நிலையம் அமைக்க நிலம் தேர்வு செய்வதில் பல்வேறு குழப்பம் இருந்த நிலையில் 2012ம் ஆண்டு பிரதமர் அலுவலகம் தற்போது விமான நிலையம் அமைந்துள்ள இடத்தை தேர்வு செய்ததாக செய்திகள் கிடைத்தன. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த இடாநகர் விமான நிலையம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive

மன்மோகன் சிங் அருணாச்சல பிரதேசத்துக்குச் செல்லவே பயந்தார் என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் 2008, 2009ம் ஆண்டுகளில் மன்மோகன் சிங் அருணாசலப்பிரதேசம் சென்றிருப்பது தெரிந்தது. அப்போது, மன்மோகன்சிங் வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அப்போது மட்டுமல்ல, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு ஆகியோர் அருணாசலப்பிரதேசம் சென்ற போது கூட சீனா எதிர்ப்பு தெரிவித்த செய்தி கிடைத்தது. 

உண்மைப் பதிவைக் காண: reuters.com I Archive I ndtv.com I Archive

அருணாச்சல பிரதேசத்தில் முதல் கிரீன் ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அருணாச்சல பிரதேசத்தின் முதல் விமான நிலையம் இல்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு சுதந்திரத்துக்குப் பிறகு இப்போதுதான் முதன் முதலில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்ற வகையில் பகிர்ந்துள்ள தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் அருணாச்சலபிரதேசத்தின் முதல் விமானநிலையம் அமைக்கப்பட்டது போல பகிரப்படும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கழித்து இப்போதுதான் அருணாச்சலில் விமான நிலையம் அமைக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading