“கடவுளே அஜித்தே” என்று விஜய் ரசிகர்கள் கோஷமிட்டார்களா?

அரசியல் | Politics தமிழ்நாடு | Tamilnadu

விஜய் மாநாட்டில் “கடவுளே அஜித்தே” என்று விஜய் ரசிகர்கள் கோஷம் எழுப்பியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ரசிகர்கள் சிலர் கடவுளே அஜித்தே என்று கோஷம் எழுப்புவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Kadavule Ajithey” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டுக்கு வந்த விஜய் ரசிகர்கள் சிலர் “கடவுளே அஜித்தே” என்று கோஷம் எழுப்பியதாக வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் வாய் அசைப்புக்கும் “கடவுளே அஜித்தே” என்ற கோஷத்துக்கும் தொடர்பில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். தவெக மாநாடு தொடர்பான பல பதிவுகள் நமக்குக் கிடைத்தன. ஆனால், இந்த வீடியோ நமக்குக் கிடைக்கவில்லை.

எனவே, கூகுள், ஃபேஸ்புக், எக்ஸ் தளம் என சமூக ஊடகங்களில் ஒன்றன்பின் ஒன்றாக “கடவுளே அஜித்தே, கடவுளே விஜயே” என்று மாற்றி மாற்றி டைப் செய்து தேடிப் பார்த்தோம். அப்போதும் நமக்கு எந்த வீடியோவும் கிடைக்கவில்லை. யூடியூபில் கடவுளே விஜயே என்று டைப் செய்து தேடிய போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த வீடியோவை தினமலர் 2024 அக்டோபர் 27ம் தேதி வெளியிட்டிருந்தது தெரிந்தது. “கடவுளே! விஜயே! படு குஷியில் தவெக தொண்டர்கள் கூட்டத்தால் புழுதி பறக்கும் பாதை!” என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை தினமலர் வெளியிட்டிருந்தது.

அதைப் பார்க்கும் போது “விஜயே கடவுளே, கடவுளே விஜயே” என்று என்று நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கோஷம் எழுப்பியதைக் காண முடிந்தது. இந்த வாய் அசைப்பு விஜய் என்ற வாய் அசைப்போடு ஒத்துப்போனது. இதன் மூலம் இந்த வீடியோ உண்மையானது இல்லை, எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவானது.

தினமலர் வெளியிட்டிருந்த வீடியோவில் “DINAMLAR” என்று வாட்டர்மார்க் லோகோ இருந்தது. அது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். நன்கு உற்று கவனித்த போது அதில் தினமலர் லோகோ இருந்தது. இதன் மூலம் கடவுளே அஜித்தே என்று விஜய் ரசிகர்கள் கோஷம் எழுப்பியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியானது.

முடிவு:

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கடவுளே அஜித்தே என்று விஜய் ரசிகர்கள் கோஷமிட்டதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel I Instagram

Avatar

Title:“கடவுளே அஜித்தே” என்று விஜய் ரசிகர்கள் கோஷமிட்டார்களா?

Fact Check By: Chendur Pandian  

Result: ALTERED