கூட்டணிக் கட்சிகளால் எந்த பயனும் இல்லை என்று துரைமுருகன் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கூட்டணிக் கட்சிகளால் எந்த பயனும் இல்லை, அவைகளுக்கு ஒதுக்கிய அனைத்து வார்டுகளுமே வீண்தான் என்று திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கூட்டணி கட்சிகளால் எந்த பயனும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த அத்தனை வார்டுகளுமே வீண்தான். அவர்களால் எங்களுக்கு எந்த ஓட்டும் வராது எங்களுடைய ஆதரவில்தான் அவர்கள் வெற்றி பெறுகின்றனர் – திமுக பொதுசெயலாளர் துரைமுருகன்” என்று இருந்தது.

இந்த பதிவை மறுநாள் நாளை இன்று என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 18ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழர்வாழ்வுரிமை கட்சி என பல கட்சிகள் இணைந்துள்ளன. இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளால் எந்த பலனும் இல்லை என்று தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாடு அரசின் அமைச்சருமான துரைமுருகன் கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. 

இதில், உள்ள தமிழ் ஃபாண்ட், டிசைன் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டுகளில் உள்ளது போல் இல்லை. மேலும், துரைமுருகன் இப்படிக் கூறினார் என்று எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சூழலில் துரைமுருகன் இப்படிப் பேசியிருந்தால் அது மிகவும் பரபரப்பான செய்தியாகியிருக்கும். குறைந்தபட்சம் அ.தி.மு.க, பாஜக ஆதரவு ஊடகங்களிலாவது வந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

உண்மையில், இப்படி ஒரு நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அதன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் தேடினோம். ஆனால், அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு பேசினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானதுதான் என உறுதி செய்தார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளால் தி.மு.க-வுக்கு எந்த பயனும் இல்லை என்று துரைமுருகன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கூட்டணிக் கட்சிகளால் எந்த பயனும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கூட்டணிக் கட்சிகளால் எந்த பயனும் இல்லை என்று துரைமுருகன் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False