தமிழகத்தில் பெயர்களுக்குப் பின்னால் குடும்பப் பெயர் இல்லாததால் நிர்வாகக் குழப்பம் ஏற்படுகிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு பரவி வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், "பெயர்களுக்குப் பின்னால் குடும்பப் பெயர் இல்லாமல் இருப்பது தமிழகத்தில் மட்டுமே. இதனால் நாடு முழுவதும் நிர்வாகக் குழப்பங்கள் ஏற்படுகின்றன." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Daulton Manasseh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 ஏப்ரல் 5ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2021 மார்ச் மாதம் இறுதியில் கோவையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசாத சில கருத்தை அவர் பெயரில் போலியான நியூஸ் கார்டு தயாரித்து சமூக ஊடகங்களில் பரப்பினர்.

"மொழியிலிருந்து பழக்க வழக்கங்கள் வரை மாறுதல் தேவை. தமிழர்களுக்குத் தீவிரமாக ஹிந்து கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்க வேண்டும். கோவில்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகக் கோவில்களில் ரயில் நிலையத்தைப் போல அனைவரும் வந்து போவதைக் காண முடிகிறது" என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக போலியான நியூஸ் கார்டு பரவியது. இது பற்றி அப்போதே நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், அப்போது பரவிய நியூஸ் கார்டுகள் போலவே புதிதாக வேறு ஒரு நியூஸ் கார்டு பரவி வருவதும் நம்முடைய கவனத்துக்கு வந்தது. அந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் பயன்படுத்துவது போல இல்லை. பலரும் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்து வரவே, அது பற்றி ஆய்வு செய்தோம்.

நியூஸ் 7 தமிழில் மார்ச் 31ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு எதுவும் இல்லை. எனவே, நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

மார்ச் 31ம் தேதி கோவையில் யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட பிரசாரம் தொடர்பான செய்தியைத் தேடினோம். அவருடைய பேச்சை தினமலர், இந்து தமிழ் உள்ளிட்ட நாளிதழ்கள் வெளியிட்டிருந்தன. அதில், எந்த இடத்திலும் அவர் தமிழர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் குடும்பப் பெயர், சாதி பெயரை போடுவது இல்லை, என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக இல்லை.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive 1 I dinamalar.com I Archive 2

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கோவை பிரசாரத்தின் போது தமிழர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் குடும்ப பெயர்களை போட்டுக்கொள்ளாததால் குழப்பம் நிலவுகிறது என்று யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார் என பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதி பெயரை பயன்படுத்தாததால் நாடு முழுவதும் குழப்பம் ஏற்படுகிறது என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பெயருக்கு பின்னால் சாதியை குறிப்பிடாததால் குழப்பம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian

Result: False