முகமது நபி விவகாரம்: இந்தியாவைக் கண்டித்து ஈரானில் நடந்த போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் இந்தியா சர்வதேசம்

இந்தியாவில், முகமது நபி பற்றிப் பொய் பரப்புவதைக் கண்டித்து ஈரானில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோவை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பியிருந்தார். அதனுடன், “இந்தியாவில் ஆட்சியில் உள்ள BJP உள்ளிட்ட  இந்துத்துவ  பாசிஸ்டுகள் முஹம்மது நபி அவர்களை அவமதித்ததைக் கண்டித்து ஈரானில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக சொல்லி வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வலம் வரும் இந்தக் காணொளி உண்மையானதா என Fact Crescendo ஆராய்ந்து சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி” என்று கூறியிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் யாராவது பகிர்ந்துள்ளார்களா எனப் பார்த்தோம். பலரும் இதை பகிர்ந்து வருவதை காண முடிந்தது. MUNAS 3 STAR என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 9ம் தேதி இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.  நிலைத் தகவலில், “இந்தியாவில் சமூக விரோத சக்திகள், தீவிரவாதிகள் நாட்டை பிளவு படுத்த, முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி பொய் பரப்புவதை கண்டித்து. ஈரானில் முஹம்மது நபி (ஸல்).அவர்கள் மீது பேரன்பு கொண்டு லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியவர்கள் மீது அன்பை வெளிப்படுத்தும் அற்புதமான காட்சி. இத்தகைய காட்சி வேறு எங்கும் கிடைக்கா காட்சி. இதுவே ஒரு சாட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவரைப் போலப் பலரும் இந்த வீடியோவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான முகமது நபி பற்றி அவதூறாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களை தற்காலிகமாகக் கட்சியிலிருந்து நீக்கி பா.ஜ.க தலைமை அறிவித்தது. இருப்பினும் ஆளும் கட்சியான பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் இவ்வாறு பேசியதால், இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சர்வதேச அளவில் இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த சூழலில் ஈரானில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது என்று பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவை InVid & WeVerify தளத்தைப் பயன்படுத்தி புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அரபி மொழியிலிருந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில் “ஏமனில் இறைத்தூதரின் மிகப்பெரிய ஆதரவாளர்கள் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஒன்று கூடினர் 10/11/2019” என்று குறிப்பிட்டிருந்தனர்.

gettyimages.in கூட இந்த நிகழ்ச்சியின் வீடியோவை தன்னுடைய தளத்தில் விற்பனைக்கு வைத்திருந்தது. அதிலும் “ஏமனில் இறைத்தூதர் முகமதுவின் பிறந்த நாள் கொண்டாட்டம்” என்று குறிப்பிட்டிருந்தனர். 

உண்மைப் பதிவைக் காண: gettyimages.in

இதன் மூலம், இந்தியாவில் இறைத்தூதர் முகமது நபிக்கு எதிராக கருத்து கூறப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஈரானில் ஆர்ப்பாட்டம் நடந்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பா.ஜ.க நிர்வாகிகள் நபிகள் நாயகம் பற்றி தவறாக பேசியதற்கு ஈரானில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் என்று பரவும் வீடியோ ஏமனில் முகமது நபி பிறந்த நாள் விழாவின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:முகமது நபி விவகாரம்: இந்தியாவைக் கண்டித்து ஈரானில் நடந்த போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply