
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடும் மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மக்கள் மிகப்பெரிய அளவில் ஊர்வலமாக செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிஹார் மக்கள் அனைவரும் வீதியில் வந்து போராடுகிறார்கள்
என்றால் நிச்சயமாக BJP க்கு ஓட்டு போட்டவர்களாக இருக்கவே முடியாது ஏதோ தில்லு முல்லு செய்துBJP வெற்றி கண்டது உறுதியாகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகார் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில், பாஜக-வின் இந்த வெற்றியை எதிர்த்து பொது மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர் என்று சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அப்படி அங்கு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடப்பதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதில் அஸ்ஸாமி பாடகர் ஜுபீன் கார்க்கின் இறுதி ஊர்வலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இறுதி ஊர்வலம் செல்லும் கூடுதல் காட்சிகளும் இருந்தன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலும் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் வாகனத்தைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
பீகார் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14, 2025 அன்று வெளியானது. தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராடும் மக்கள் என்று தற்போது சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவோ செப்டம்பர் இறுதியில் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த நேரத்தில் வாக்குப் பதிவு கூட நடக்கவில்லை. இதன் மூலம் பழைய வீடியோவை எடுத்து தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராடும் பீகார் மக்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அஸ்ஸாம் பாடகர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் வீடியோவை எடுத்து தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பீகார் மக்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:பீகார் தேர்தல் முடிவுக்கு எதிராக போராடும் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


