
திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று ஒரு சிசிடிவி விடியோ காட்சி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நிலடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடம் இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “திபெத்தில் ஏற்பட்ட 7.1 மேக்னிடியூட் நிலநடுக்கத்தில் 53 பேர் பலி. இதன் அதிர்வு நேபாளம், இந்தியாவில் உணரப்பட்டது. அதிர்ச்சியான சிசிடிவி காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “திபெத் பகுதியில் 7.1 magnitude நிலநடுக்கம்.…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜனவரி 7, 2025 அன்று திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திபெத் நிலநடுக்க வீடியோ என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2015ம் ஆண்டில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதில், நேபாளம் நாட்டின் திரிபுரேஷ்வர் சௌக் என்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த நிகழ்வு பதிவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அது மட்டுமின்றி இந்த வீடியோவை வைத்து 2015ம் ஆண்டில் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளும் நமக்கு கிடைத்தன. அனைத்திலும் இது நேபாளம் நாட்டில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: theguardian.com I Archive I euronews.com I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் திபெத் நிலநடுக்க காட்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் இது 2025ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சிசிடிவி காட்சியை, திபெத் நிலநடுக்கம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
