கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில சினிமா பிரபலங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

தமிழ்நாட்டுத் திராவிட நடிகர்களைப் போல இல்லாமல் கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில திரைப்பட நடிகர்கள் என்று சில புகைப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தெலுங்கு, இந்தி நடிகர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போன்ற ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தர பிரதேஷ் மாநிலம் பிராயக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மற்ற மாநிலங்களில் உள்ள சினிமா நடிகர்கள் எல்லாம் புனித நீராடி விழா கொண்டாடுகிறார்கள் 

நம்ம ஊரு நடிகர்கள் போலி திராவிடம் பேசி நம்மளை ஏமாற்றுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிராயக்ராஜில் மஹா கும்பமேளா ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் கோடிக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பிரபல சாமியார்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் அமிதாப் பச்சன். ரன்பீர் கபூர், ஆலியா பட், பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், வட இந்திய மற்றும் தெலுங்கு திரைப்பட உலகைச் சார்ந்த பிரபலங்கள் எல்லாம் பங்கேற்று புனித நீராடினார்கள் என்றும், ஆனால் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள் பங்கேற்கவில்லை என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருத்தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் திரைப்பட நடிகர்கள், நடிகைகள் பற்றி அவதூறான மத ரீதியான குற்றச்சாட்டுக்களை பலரும் முன்வைத்து வருகின்றனர்.

ஆனால், இந்த புகைப்படங்களை பார்க்கும் போது உண்மையான புகைப்படங்கள் போல இல்லை. தெளிவாகவே ஏஐ புகைப்படங்கள் போல இருப்பதைக் காண முடிகிறது. மேலும், இந்த புகைப்படங்களில் ABP என்ற ஊடகத்தின் லோகோவும் உள்ளது. அவர்கள் இது உண்மையான புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார்களா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive

ஏபிபி செய்தி ஊடகத்தின் இணையதள பக்கத்தைப் பார்த்தோம். அதில், திரைப்பட நடிகர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்றால் எப்படி இருக்கும் என்று ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம் என்று சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தனர். அதில் நம் ஊர் ரஜினிகாந்த், நடிகை தமன்னாவின் புகைப்படமும் இருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்பட தொகுப்பு அதில் இல்லை.

எனவே, ஏபிபி ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அதில், கையில் திரிசூலம், நெற்றியில் திலகம் என மகா கும்பமேளாவில் டைவ் செய்யும் பிரபலங்கள் இப்படித்தான் இருப்பார்கள். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தெளிவாக ஏஐ தொழில்நுட்பத்தால் உருவான புகைப்படம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஏபிபி ஊடகம் மட்டுமின்றி வேறு பல ஊடகங்களும் கூட இந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தன. அனைத்திலும் தெளிவாக ஏஐ புகைப்படம் என்று குறிப்பிட்டிருந்தனர். 

வதந்தி பரப்பியவர்களோ அந்த தகவலை அகற்றிவிட்டு அல்ல மறைத்துவிட்டு தெலுங்கு, பாலிவுட் நடிகர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்று நீராடினர் என்று தவறாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது தெளிவாகிறது. இந்த புகைப்படத்தை யார் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. இதை உருவாக்கியவர்கள் பற்றிய விவரத்தை ஏபிபி ஊடகமும் வெளியிடவில்லை. இதை யார் உருவாக்கினார்கள் என்பதை தேடிக் கொண்டிருக்கிறோம். அது பற்றிய விவரம் அறிந்தால் அதை கட்டுரையில் சேர்க்கிறோம்.

பிரபலங்கள் யாராவது கும்பமேளாவில் பங்கேற்றுள்ளார்களா என்று தேடினோம். ஆனால், பலரும் பங்கேற்க உள்ளார்கள் என்ற செய்திகள் மட்டுமே கிடைத்தன. சினிமா பிரபலங்கள் பங்கேற்றதாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் சர்வதேச தலைவர்கள் முதல் உள்ளூர் சினிமா பிரபலங்கள் வரை பங்கேற்றது போன்ற ஏஐ படங்கள் மட்டுமே நமக்கு கிடைத்தன.

நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படங்கள் ஏஐ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திரைப்பட பிரபலங்கள் கும்பமேளாவில் நீராடினால் எப்படி இருக்கும் என்று ஏஐ மூலம் புகைப்படங்களை உருவாக்கி ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை உண்மை என்று கருதி தமிழ்நாட்டு நடிகர்கள் தவிர்த்து மற்ற மாநில நடிகர்கள் எல்லாம் நீராடியுள்ளனர் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவலை பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில சினிமா பிரபலங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False