FACT CHECK: ஆப்கனில் பெண்ணை சுட்டுக் கொன்ற தாலிபான்கள் என்று பரவும் பழைய வீடியோ!

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

ஆப்கானிஸ்தால் தாலிபான்கள் பெண் ஒருவரை நடு ரோட்டில் சுட்டுக் கொன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பெண் ஒருவரை கைகள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் முட்டி போட வைக்கின்றனர். சுற்றிலும் கையில் இயந்திரத் துப்பாக்கி வைத்துக் கொண்டு ஆண்கள் பலரும் நிற்கின்றனர். அரபி போன்ற மொழியில் பேசுகின்றனர். கடைசியில் அந்த பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்கின்றனர்.

நிலைத் தகவலில், “காட்டுமிராண்டிதனம் – தாலிபான் நடுரோட்டில் சுட்டுக்கொலை காட்டுமிராண்டிதனம். தாலிபான் நடுரோட்டில் சுட்டுக்கொலை ஏனென்றால் பூராகாவை முகத்தில் கழற்றியது 🙄🙄. ஆப்கானில் மதவெறி பிடித்த வெறியர்களின் மடத்தனம். இந்த கொடுமை மாற #கருணையே #வடிவான #கந்தப்பெருமானின் #ஆட்சி #உலகெங்கும் #வரவேண்டும் வேண்டிகொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Muruga yugam Siddhar yugam Arangar yugam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 17ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தாலிபான்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அரபு நாடுகளில் பெண்கள் விற்கப்படும் கொடுமை என்று சமூக ஊடகங்களில் முன்பு வதந்தி பரவியது. உண்மையில் அது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பெண்களை எப்படி ஏலம் விடுகின்றனர் என்று லண்டனில் நடந்த வீதி நாடகம் ஒன்றின் காட்சி என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது அந்த வீடியோவை தாலிபான்கள் பெண்களை ஏலம் விடுகிறார்கள் என்று பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இந்த நிலையில், பெண் ஒருவரை நடு ரோட்டில் வைத்து தாலிபான்கள் சுட்டுக் கொன்றதாக வீடியோ பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் உள்ளவர்களைப் பார்க்கும் போது தாலிபான்கள் போல இல்லை. எனவே, இந்த தகவல் உண்மைதானா என்று ஆய்வு செய்தோம். 

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2015ம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. சிரியாவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை அல் கொய்தா அமைப்பினர் கொலை செய்தனர் என்று 2015ம் ஆண்டு வெளியான பல செய்திகள், வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: dailymail.co.uk I Archive 1 I independent.co.uk I Archive 2

இதன் மூலம் 2015ம் ஆண்டு வெளியான, சிரியாவில் பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சியை எடுத்து, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களை சுட்டுக் கொல்வதாகத் தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்படும் வீடியோ 2015ம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆப்கனில் பெண்ணை சுட்டுக் கொன்ற தாலிபான்கள் என்று பரவும் பழைய வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False