FACT CHECK: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்ததாக பரவும் வதந்தி!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1  I Archive 1 I Facebook  2 I Archive 2

ராணுவ வாகனங்கள் செல்லும் காட்சி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மிகப்பெரிய அளவில் ராணுவத்தை குவிக்க மோடி அரசு திட்டம்? – போராட்டக்களத்தை நோக்கி அணி அணியாக, இந்திய ராணுவ படைகள் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை Kalaignar Seithigal ஃபேஸ்புக் பக்கம் 2020 டிசம்பர் 11ம் தேதி வெளியிட்டுள்ளது.

Kalaignar Seithigal மட்டுமின்றி பலரும் பல விதங்களில் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். Tamilan Thahir என்பவர் 2020 டிசம்பர் 15ம் தேதி இதே வீடியோவை “விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் முன்னேறி வந்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். பலரும் இதை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லிக்குள் நுழைவதை முதலில் போலீசார் தடுத்தனர். தற்போது போராட்டம் நடைபெறும் இடத்தில் விவசாயிகளை போலீசார் தடுப்பதாக எந்த தகவலும் இல்லை. போராட்டத்தை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவேளை அப்படி நடவடிக்கை எடுத்து போலீசாரால் விவசாயிகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மட்டுமே ராணுவத்தை அழைக்க வாய்ப்புள்ளது. 

வீடியோவைப் பார்க்கும் போது அதில் ராணுவ வீரர்கள் அழைத்து வருவது போல இல்லை. எல்லாமே ராணுவ ஆயுதங்களாக உள்ளன. பீரங்கிகள் எல்லாம் கொண்டு வரப்படுவதைக் காணலாம். ஒருவேளை விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் அழைக்கப்பட்டாலும் அதற்கு பீரங்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எல்லாம் கொண்டுவருவார்களா என்ற கேள்வி எழுந்தது. எனவே இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது தெரிந்தது. விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டதா என்று கூகுளில் பல்வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கில பிரிவு சார்பில் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஏ.பாரத் பூஷன் பாபுவைத் தொடர்புகொண்டு விசாரிக்கப்பட்டது. அப்போது அவர், “டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வருகிறது என்று பகிரப்படும் வீடியோ தவறானது. வீடியோவில் நீங்கள் காண்பது ராணுவத் தளவாடங்கள் இடப்பெயர்ச்சி மட்டுமே. இது வழக்கமான ஒன்றாகும். இந்த ராணுவ வாகனங்களில் ராணுவ ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. ராணுவ வீரர்கள் யாரும் இல்லை என்பதைத் தெளிவாக காண முடியும்” என்றார்.

அதே நேரத்தில் அரசின் செய்திப் பிரிவான பி.ஐ.பி இது தொடர்பாக ட்வீட் ஒன்றை வெளியிட்டிருப்பதும் நமக்கு கிடைத்தது. அதில், “சமூக ஊடகங்களில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது தவறான தகவல் ஆகும். இது வழக்கமான ராணுவ தளவாடங்கள் இடப்பெயர்ச்சிதான். விவசாயிகள் போராட்டத்துடன் இதை தொடர்புப்படுத்தி தவறாக பகிர்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Archive

நம்முடைய ஆய்வில், விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் அழைக்கப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க ராணுவம் அழைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை தடுத்து நிறுத்த ராணுவம் வருகிறது என்று பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்ததாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •