
கோழிக்கு வரி, குஞ்சுக்கு வரி, அவுக ஆத்தாளுக்கு வரி என்று எல்லாவற்றுக்கும் வரி வசூலிக்கும் தமிழ்நாடு அரசு என்று தி.மு.க ஆட்சியை மூதாட்டி ஒருவர் வெளுத்து வாங்கினார் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கிராமத்து மூதாட்டி ஒருவரிடம் “சொளையா ஆயிரம், ஆயிரம் வாங்குனே, எப்படி வாங்குனே?” என்று ஒருவர் கேள்வி எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதற்கு அந்த பாட்டி என்ன 1000 சொளையா கொடுத்தான் என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் எடப்பாடி என்று கூற, “அவங்க ஆத்தா, அக்கா வீட்டு காசையா கொடுத்தான், இல்ல பொண்டாட்டி தாலிய வித்துட்டா கொடுத்தான்? நம்ம காசுப்பா. நம்ம காசு” என்று பாட்டி வெடித்து முழங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “அடங்கொப்ப மவனே ..😅 கோழிக்கு வரி, குஞ்சுக்கு வரி, அவுக ஆத்தாளுக்கு வரி , அவுக அப்பனுக்கு வரி, அதுல ஏறி போறதுக்கு வரி, விடியல் ஆட்சியை வெளுத்து வாங்கும் பாட்டி!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பதிவை அதிமுக அசோக் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 31ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.1000ம் உதவித் தொகை வழங்கப்பட்டது. அதை கிராமத்து மூதாட்டி ஒருவர் விமர்சிப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் டிக்டாக், ஹலோ ஆப்-கள் தடை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. டிக்டாக், ஹலோ ஆப் லோகோவுடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ பார்த்த நினைவு இருந்ததால் இது பற்றி ஆய்வு செய்தோம்.
வீடியோவிலேயே ஸ்டாலின் அரசு ரூ.1000ம் கொடுத்தது என்று குறிப்பிடவில்லை. “எடப்பாடி” கொடுத்ததாகத் தெளிவாக குரல் கேட்கிறது. எனவே, பழைய வீடியோதான் இது என்பது தெளிவானது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் தேர்வு செய்ய வீடியோவை புகைப்பட காட்சியாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 1
அப்போது 2020ம் ஆண்டு இந்த வீடியோவை தி.மு.க ஆதரவு சமூக ஊடக பக்கங்களில் பலரும் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. “எடப்பாடி கொடுத்த 1000 ரூபாய் மக்களின் வரி பணம் தான் என்பதை இந்த கிராமத்து பாட்டி எந்த மாதிரி ஸ்லாங்கில் சொல்றாங்க பாருங்க மக்களே” என்று Trending Videos என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி இந்த வீடுியோவை பதிவேற்றம் செய்திருந்தது.
வீடியோவிலேயே எடப்பாடி கொடுத்தார் என்பது போன்று கேள்வி கேட்கப்படுகிறது. 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்துள்ளது. தி.மு.க 2021 மே மாதம் தான் ஆட்சிக்கு வந்தது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை மூதாட்டி கிழி கிழியென்று கிழித்த வீடியோவை ஸ்டாலினை வெறுத்து வாங்கும் பாட்டி என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் இந்த வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2020ம் ஆண்டு அ.தி.மு.க அரசை விமர்சித்து மூதாட்டி ஒருவர் பேசிய வீடியோவை, 2023ல் தி.மு.க அரசை விமர்சித்த பாட்டி என்று சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:திமுக., ஆட்சியை வெளுத்து வாங்கும் பாட்டி என்று பரவும் 2020ம் ஆண்டு வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
