தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா?
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு, அது நடைமுறைக்கு வந்தது என்று புதிய கட்டண விகித நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது என்று புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்து யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், "திராவிடத்துக்கு தமிழக மக்கள் கொடுத்த பரிசு 40/40க்கு மனம் மகிழ்ந்த திராவிடம் தமிழக மக்களுக்கு கொடுத்த ஷாக் பரிசு மின்சார கட்டண உயர்வு... வாழ்த்துகள் தமிழா..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் 2021ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 2022ல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதே 2026 - 27 வரை, ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் 2023ல் மின்சார கட்டணத்தை மின்சார வாரியம் உயர்த்தியது. கடந்த 2023 ஜூலை முதல், 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை, தமிழக அரசு ஏற்றது. வணிக வளாகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும், 1 யூனிட்டிற்கு 13 காசு முதல், 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பொது மக்களுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.
2024ம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரை அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. அறிவிப்பு வெளியாகலாம் என்று செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த சூழலில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழ்நாடு அரசு மின்சார கட்டண உயர்வு பரிசை வழங்கியுள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
40-க்கு 40ஐ வழங்கினாலும், வழங்காவிட்டாலும் 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் உத்தரவு படி மின்சார கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதி. 2022லேயே இதற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. உண்மை இப்படி இருக்க, புதிதாக மின்சார கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எப்படியும் மின்சார கட்டணம் உயரப்போகிறது... எனவே, தகவல் கூட ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர்கள் அளித்திருக்கும் புதிய மின்சார கட்டணம் உண்மையா என்ற கேள்வி எழவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தமிழ்நாடு அரசு கட்டண உயர்வை அறிவிக்காத சூழலில், இந்த டேரிஃப் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த புதிய தலைமுறை நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம். இந்த நியூஸ் கார்டை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை "புதிய தலைமுறை" ஊடகம் 2022ம் ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. புதிய தலைமுறை வெளியிட்டிருந்த மின்சார கட்டண உயர்வு அமலுக்கு வந்தது என்ற செய்தி வீடியோவின் முகப்பு படமாக இந்த புகைப்படத்தை வைத்திருந்தனர். அதை எடுத்து இப்போது வெளியிட்டது போன்று தவறாக பகிர்ந்திருப்பது தெளிவானது.
மின்சார கட்டண உயர்வு தொடர்பாக மின்சார வாரியம் ஏதேனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களை பார்த்தோம். அப்போது பழைய நியூஸ் கார்டை புதிது போல சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது தொடர்பாக அது வெளியிட்டிருந்த பதிவு ஒன்று கிடைத்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் இருந்த டேரிஃப் தான் அதிலும் இருந்தது.
தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தலாம்... ஆனால், நம் ஆய்வுக் கட்டுரை வெளியாகும் வரையில் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. வரும் நாட்களில் கட்டண உயர்வை மின்சார வாரியம் அறிவிக்கலாம்... 2023ம் ஆண்டு போல் கட்டணத்தை உயர்த்தாமலும் போகலாம்... ஆனால், தமிழ்நாடு அரசின் புதிய கட்டணம் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையில்லை... இது 2022ம் ஆண்டு செப்டம்பர் முதல் நடைமுறையில் உள்ள கட்டணம் விகிதம்தான். 2022ல் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை புதிது போல பகிர்ந்திருப்பது தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியது என்றும் புதிய கட்டணம் எவ்வளவு என்றும் பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா?
Written By: Chendur PandianResult: False