
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிவம் துபே அடித்த பந்தில் ஓய்வறை கண்ணாடி சிதறியது என்று ஒரு புகைப்படத்தை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சார்ந்த சிவம் துபே 111 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் ஒன்றை அடித்தார். அது ஓய்வறை கண்ணாடியை உடைத்தது போன்று புகைப்படத்துடன் நியூஸ் கார்டை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ளது. அதில், “சிக்ஸரில் சிதறிய கண்ணாடி. சிவம் துபே அடித்த 111 மீட்டர் சிக்கரில் உடைந்த கண்ணாடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை News18 Tamil Nadu ஃபேஸ்புக் பக்கம் 2023 ஏப்ரல் 18ம் தேதி வெளியிட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
2023 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே-வின் சிவன் துபே 111 மீட்டர் தூரத்துக்கு சிக்சர் அடித்திருந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரல் ஆனது. ஆனால், அந்த பந்து மைதானத்தைத் தாண்டி சென்றது போன்று உள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்தின் கண்ணாடி உடைந்தது போல இல்லை. எனவே, இந்த புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.
அப்போது, இந்த புகைப்படத்தைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியிட்டிருப்பது தெரிந்தது.
இதன் மூலம் 2022ல் வெளியான படத்தை இப்போது 2023 ஐபிஎல் போட்டியின் போது எடுக்கப்பட்டது போன்று தவறாக பகிர்ந்திருப்பது தெரிந்தது. இதன் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2022 ஐபிஎல்-ல் கண்ணாடி உடைந்த படத்தை எடுத்து 2023 சென்னை வீரர் சிவம் துபே அடித்த 111 மீட்டர் தூர சிக்சரில் உடைந்த கண்ணாடி என்று தவறான தகவலை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் தவறு என்று உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சிக்ஸரில் சிதறிய கண்ணாடி என்று பழைய படத்தை வெளியிட்ட நியூஸ் 18 ஊடகம்!
Fact Check By: Chendur PandianResult: False
