
யமுனை ஆற்றில் ஷாம்புவை கலந்துவிட்டதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை விட சிறந்த முதலமைச்சர் ரேகா குப்தா என்று அரசியல் நையாண்டியாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆற்றில் கலந்து வரும் நுரையில் பெண்கள் தலைக்கு குளிக்கும் வீடியொ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கெஜ்ரிவாலை விட டெல்லி முதல்வர் ரேகா குப்தா பரவாயில்லை, யமுனா ஜியை சுத்தம் செய்ய இலவச ஷாம்பு கலந்து விட்டுள்ளார்😜” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லியில் காற்று, யமுனை ஆற்று நீர் மாசு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த நிலையில் வட இந்தியர்கள் கொண்டாடும் சத் பூஜைக்காக யமுனையில் சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு குளம் ஒன்றை டெல்லி அரசு உருவாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் டெல்லி பாஜக முதலமைச்சர் ரேகா குப்தா ஆட்சியில் யமுனை ஆற்றில் வரும் நுழை கழிவுகளை ஷாம்பு போல பயன்படுத்திக் குளித்த பெண்கள் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை கடந்த ஆண்டே பார்த்த நினைவு இருந்ததால், இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2024ம் ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் இந்த வீடியோ செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.
டெல்லியில் பாயும் யமுனை ஆற்றில் மாசு அளவுக்கு அதிகமாக இருப்பதால் யமுனை ஆற்றில் நீராடி சத் பூஜை கொண்டாட டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதையும் மீறி பெண்கள் பலரும் யமுனை ஆற்றில் நீராடினர். யமுனையில் வந்த கழிவு நுரையை ஷாம்பு போல பயன்படுத்தி நீராடிய பெண்கள் என்று அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive
ரேகா குப்தா 2025ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். 2025ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதிதான் முதலமைச்சராக ரேகா குப்தா பொறுப்பேற்றார். ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி வரை ஆம் ஆத்மி கட்சிதான் டெல்லியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தது. 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி முதல்வராக பொறுப்பேற்றார். வீடியோ வெளியான 2024 நவம்பர் காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சிதான் டெல்லியில் ஆளுங்கட்சியாக இருந்துள்ளது.

உண்மைப் பதிவைக் காண: ddnews.gov.in I Archive
ரேகா குப்தா பொறுப்பேற்ற பிறகு யமுனையில் தண்ணீர் சுத்தமாகிவிட்டது என்று கூறவில்லை. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ரேகா குப்தா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பதிவு செய்யப்பட்டது இல்லை என்பது மட்டும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் 2024ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை 2025ல் பாஜக ஆட்சிக்குப் பிறகு எடுக்கப்பட்டது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரேகா குப்தா ஆட்சியில் யமுனை ஆற்றில் நுரை கழிவில் குளித்த பெண்கள் என்று பரவும் வீடியோ 2024ம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:ரேகா குப்தா ஆட்சியில் யமுனையில் பெண்கள் ஷாம்பு குளியல் செய்தனர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


