
‘’நடிகர் தவசியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த நடிகர் விஜய்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

நவம்பர் 18, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாகக் கூறியுள்ளனர். இது உண்மையா, பொய்யா என்ற குழப்பம் நிலவுவதாக, நமது வாசகர்கள் வாட்ஸ்ஆப் வழியே நம்மிடம் முறையிட்டனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதாக சமீபத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. பிறகு, அவரது தந்தை இப்படி தொடங்கியதாக, அவர் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இதையடுத்து, விஜய் பற்றி சமீப நாட்களாக, சமூக வலைதளங்களில் வித விதமான மீம்ஸ்கள், விமர்சனங்கள், போலிச் செய்திகள் பகிரப்படுவது வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், சக சினிமா நடிகர் தவசி குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டாலும், தனக்கு நிதி உதவி செய்யும்படி அவர் சமூக வலைதளம் வாயிலாக உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு நடிகர்களும் நிதி உதவி அளிப்பதாக, அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இது தவிர அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரில் சென்று அவரை சந்தித்து, உதவிகள் செய்தும், ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர். இதுபோல, திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன், அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவருக்கு மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதுபற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் தகவல் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய், தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினார்; ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார் என்று ஃபேஸ்புக்கில் தகவல் பரவியது. இதுபற்றி நாமும் ஆய்வு செய்து, தவறான தகவல் என உறுதிப்படுத்தியிருந்தோம்.

மேற்கண்ட வதந்தியை பரப்பிய அதே ஃபேஸ்புக் ஐடி, தற்போது மீண்டும், நடிகர் விஜய், தவசியை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார் என, தகவல் பகிர்ந்துள்ளது.
உண்மையில், இதுவும் தவறான தகவல்தான். இதுபற்றி நாம் சினிமாத் துறை பிஆர்ஓ வட்டாரத்திலும், நடிகர் விஜய்க்கு நெருங்கிய வட்டாரத்திலும் கேட்டு உறுதிப்படுத்தியுள்ளோம்.
இந்த செய்தி வெளியிடப்படும் நொடி வரை (நவம்பர் 20, 2020) நடிகர் விஜய், தவசியை நேரில் சந்திக்கவில்லை. இது வேண்டுமென்றே விஜய் பற்றி பகிரப்படும் வதந்தியாகும்.
தற்போதைய நிலையில், நவம்பர் 19, 2020 நிலவரப்படி, நடிகர் ரோபோ ஷங்கர், தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். இதுதொடர்பான செய்தி லிங்குகள் கீழே தரப்பட்டுள்ளன.
எனவே, விஜய் பற்றி தொடர்ச்சியாக மேற்கண்ட ஃபேஸ்புக் ஐடி வதந்தி பகிர்ந்து வருவதாகவும், அந்த வரிசையில் மற்றொரு வதந்தியே குறிப்பிட்ட தகவல் எனவும், உறுதி செய்யப்படுகிறது.
திமுக எம்எல்ஏ சரவணன் பகிர்ந்த புகைப்படம் ஒன்றை எடுத்து, எடிட் செய்து, விஜய் மருத்துவமனைக்குச் சென்று, நடிகர் தவசியை சந்தித்தது போல தகவல் பகிர்ந்துள்ளனர்.

முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நடிகர் தவசியை மருத்துவமனைக்குச் சென்று விஜய் சந்தித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
