
‘’நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

நவம்பர் 5, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவு லிங்கை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.
இந்த செய்தியில், நடிகர் விஜய் கட்சி தொடங்கிவிட்டதாகக் கூறி, இணையதளம் ஒன்றின் செய்தி லிங்கை இணைத்து, பகிர்ந்துள்ளனர்.
குறிப்பிட்ட இணையதள செய்தியை பார்வையிட்டோம். அதில், நடிகர் விஜய், அரசியல் கட்சி தொடங்கிவிட்டதாகவும், அதன் நிர்வாகிகள் விவரம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தனர். அத்துடன், கூடுதல் ஆதாரத்திற்காக, தந்தி டிவியின் வீடியோ ஒன்றையும் இணைத்திருந்தனர்.


இந்த தகவலை பலரும் உண்மை விவரம் தெரியாமல் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட இணையதளம் ஆதாரத்திற்காக பகிர்ந்துள்ள தந்தி டிவியின் வீடியோ செய்தியில், நடிகர் விஜய், அரசியல் கட்சியாக அங்கீகரிக்க கேட்டு, தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், பின்னர் அவர்களே வெளியிட்ட மற்றொரு செய்தியில், நடிகர் விஜய் கட்சி தொடங்கப் போவதாகக் குறிப்பிட்டனர்.
இப்படியாக, கடந்த நவம்பர் 5, 2020 அன்று சில மணிநேரம் ஊடகங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரிதும் பரபரப்பாக இந்த விசயம் பேசப்பட்டு வந்தது. பிறகு, நடிகர் விஜய் இதுபற்றி மறுப்பு தெரிவித்தார்.
‘’குறிப்பிட்ட கட்சி தொடங்கும் நடவடிக்கையை எனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எனக்கே தெரியாமல் மேற்கொண்டுள்ளார். எனக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை,’’ என்று விஜய் கூறியிருந்தார்.

இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர் இதுபற்றி ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துப் பேசினார்.
இதன்படி, விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தனிப்பட்ட முறையில் விஜய் ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைக்கும் வகையில், அதனை ஒரு கட்சியாக, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முயற்சித்துள்ளார்.
இந்த உண்மை சரியாகத் தெரியாமல், பரபரப்பிற்காக முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை, மற்றவர்களும் உண்மைத்தன்மை சரிபார்க்காமல் அப்படியே பகிர்ந்து, சமூக வலைதள பயனாளர்களை குழப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினாரா?- திடீர் சர்ச்சையின் பின்னணி…
Fact Check By: Pankaj IyerResult: False
