உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதா திருவள்ளுவர் சிலை?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக திருவள்ளுவர் சிலை பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு தரையில் கிடத்தப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட தரையில் கிடத்தப்பட்ட உருவம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது யார் தெரியுமா கொரோனாவால் உயிர் இழந்த நபர் அல்ல. மோடி திருக்குறளை பேசுகிறார் என பெருமை பேசும் காவிகளே. தென்னக வள்ளுவனை வடக்கே கொண்டு சேர்ப்போம் என பாஜக மந்திரியால் அப்போதய பரட்டை சவுண்டக்கா தலைமையில் தமிழகத்திலிருந்து கோலாகலமாக தமிழகத்திலிருந்து எடுத்துச் சென்று கங்கைகரையோறும் நிறுவுகிறோம் என்று உத்திர பிரதேசத்தில் ஒரு பூங்காவில் தள்ளப்பட்ட ஐயன் வள்ளுவன். காரணம் தெரியுமா. வள்ளுவனும் உயர்சாதி இல்லையாம் அதனால் பாஜக முதல்வர் கங்கைக்கரையில் நிறுவ மறுத்துவிட்டார். வள்ளுவன் சூத்திரனாம். தெரிந்துகொள்ளுங்கள் மோடி பாஜகவின் பொய் வேசம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Shajath Ali‎ என்பவர் Writer மொள்ளமாரி தாஸ் (மாரி தாஸ்) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூலை 6, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கைக் கரையில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்போவதாக பா.ஜ.க எம்.பி-யாக இருந்த தருண் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். அறிவித்தது போலவே கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை செய்யப்பட்டு ஹரித்துவாருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சிலையை திறப்பதில் சர்ச்சை ஏற்படவே சிலை அகற்றப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது.

ஆனால், உத்தரப்பிரதேசத்தில் திருவள்ளுவர் சிலை இன்னும் திறக்கப்படாமல், பூங்காவில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு கிடப்பது போல பதிவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த தகவல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

thehindu.comArchived Link 1
tamil.oneindia.comArchived Link 2

முதலில் இந்த புகைப்படம் உத்தரகாண்டில் எடுக்கப்பட்டதா அல்லது உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டதா என்று முதலில் உறுதி செய்ய முடிவுசெய்தோம். இந்த படத்தை 2016ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி இந்து வெளியிட்டிருந்தது. ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு வரவேற்பு இல்லை என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். “கங்கை நதியின் சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேலா பவனில் திருவள்ளுவர் சிலை கிடத்தப்பட்டுள்ளது. சிலையை நிறுவ பா.ஜ.க எம்.பி தருண் விஜய் முறையான அனுமதி பெறாத காரணத்தால் இந்த சிலை தற்போது கிடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலை கும்பமேளா நேரத்தில் நெரிசல் மிக்க இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டதற்கு சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவள்ளுவருக்கும் ஹரித்துவாருக்கும் என்ன தொடர்பு, அவரை ஏன் ஹரித்துவாரில் நிறுவ வேண்டும்? இங்குள்ள மக்களுக்கு திருவள்ளுவரைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில் ஏன் நிறுவ வேண்டும் என்று துவாரகா சாராதா பீடம் மற்றும் ஜோதி பீடம் சங்கராச்சாரியார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த திருவள்ளுவர் சிலையை தருண் விஜய் ஹரித்துவாரில் நிறுவ முயலுகிறார் என்று சாதுக்கள் குற்றம்சாட்டுகின்றனர்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

business-standard.comArchived Link 1
vikatan.comArchived Link 2

சிலையின் தற்போதைய நிலை பற்றி தேடியபோது, “திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று 2016ம் ஆண்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியது தொடர்பான செய்திகள் கிடைத்தன. மேலும், திருவள்ளுவர் சிலை மீண்டும் அமைக்கப்படும் என்று அப்போது உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹரிஷ் ராவத் உறுதி செய்த செய்தியும், சில மாதங்கள் கழித்து சிலையை அவர் திறந்து வைத்த செய்தியும் நமக்கு கிடைத்தது. ஹரித்துவார் கங்கைக் கரையில் திருவள்ளுவர் பெயரில் பூங்கா ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும்; அதை மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் திறந்து வைத்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

நம்முடைய ஆய்வில், இந்த திருவள்ளுவர் சிலை உத்திரகாண்ட் மாநிலத்தில் 2016ம் ஆண்டு நிறுவ முயன்ற போது தடுக்கப்பட்டதும், அதன் பிறகு திறக்கப்பட்ட செய்தியும் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், திருவள்ளுவரின் சாதி தொடர்பாக சர்ச்சை எழுந்ததும் உண்மை. ஆனால், அனைத்தையும் தாண்டி 2016ம் ஆண்டே சிலை திறக்கப்பட்டுவிட்டது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த தகவல் உண்மையும் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதா திருவள்ளுவர் சிலை?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False