
அமொிக்க யூடியூபர் IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் (Darren Jason Watkins Jr) மீது தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் காலணிகளை வீசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காரில் சென்று கொண்டிருந்த அமொிக்க யூடியூபர் IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் மீது மோட்டார் பைக்கில் டிவிகே என்று கத்திக்கொண்டே வந்த ஒருவர் காலணிகளை வீசியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “
இந்தா இன்னொண்ணு 😂 #தலவிதிகே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமொிக்க யூடியூபர் IShowSpeed டாரன் ஜேசன் வாட்கின்சன் ஜூனியர் தாய்லாந்தில் ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். அதை அவர் யூடியூபில் நேரடி ஒளிபரப்பும் செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் டிவிகே, டிவிகே என்று கத்தியது தொடர்பான காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், யூடியூபர் மீது டிவிகே என்று கத்தியவர்கள் காலணிகளை வீசியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், டிவிகே என்றால் என்ன என்று யூடியூபர் கேட்க தளபதி விஜய், சீஃப் மினிஸ்டர் ஆஃப் இந்தியா என்று கூறுவது போன்று இருந்தது. இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
IShowSpeed யூடியூபில் வெளியிட்டிருந்த லைவ் ஸ்ட்ரீம்ஸ் வீடியோவை பார்த்தோம். வீடியோவின் ஒரு மணி நேரம் 38வது நிமிடம் 40வது விநாடியில்தான் காருக்குள் காலணி வீசும் காட்சி வருகிறது. நீல நிற டீஷர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் காலணிகளை வீசுகிறார். அதன் பிறகு 1:39:06 மணி நேரத்தில் தமிழ் இளைஞர்கள் இருவர் மோட்டார் பைக்கிள் வந்து யூடியூபருக்கு கை கொடுக்கின்றனர்.
அப்போது காலணிகளை வீசிய நபர் அங்கு வந்து தான்தான் காலணிகளை வீசியதாக வந்து பேசுகிறார். நீல நிற டீஷர்ட் அணிந்திருந்த அந்த இளைஞரை பார்க்க இந்தியர் போல இல்லை. ஆப்ரிக்க அமெரிக்கர் போல உள்ளார். மேலும், அவர் அந்த காலணியில் IShowSpeed-ன் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டு, சென்றுவிடுகிறார். அவர் எந்த இடத்திலும் டிவிகே, விஜய் என்றெல்லாம் கூறவில்லை.
வீடியோவின் 1:39:29வது மணி நேரத்தில் தான் தமிழ் இளைஞர்கள் டிவிகே என்று கத்துகின்றனர். டிவிகே என்றால் என்ன என்று கேட்க, தளபதி விஜய், தென்னிந்திய நடிகர், இந்தியாவின் முதலமைச்சர் என்றெல்லாம் கூறுகின்றனர். டிவிகே என்று அவர்கள் கத்திக்கொண்டு பைக்கில் வந்த காட்சி மட்டும் தனியாக எடுத்து விஜய் ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ அப்படியே யூடியூபர் வெளியிட்டிருந்த லைவ் ஸ்ட்ரீம் காட்சியுடன் ஒத்திருந்தது. ஆனால், காலணி வீசிவிட்டு டிவிகே என்று கத்திய பகுதி இல்லை. இதன் மூலம் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது.
அமெரிக்க யூடியூபர் தாய்லாந்தில் பயணம் மேற்கொண்ட போது இரண்டு பேர் டிவிகே என்று கத்தியுள்ளனர். அதே நேரத்தில் வேறு ஒருவர் காலணிகளை அவர் மீது போட்டு அதில் கையெழுத்து போட்டு தரும்படி கேட்டுள்ளார். இந்த இரண்டு நிகழ்வுகளின் ஆடியோவை மட்டும் சற்று எடிட் செய்து யூடியூபர் மீது காலணி வீசியது போன்று வீடியோவை போலியாக உருவாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பிரபல அமெரிக்க யூடியூபர் மீது தவெக தொண்டர்கள் காலணி வீசியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:தவெக தொண்டர்கள் தாய்லாந்தில் பிரபல யூடியூபர் மீது காலணி வீசினார்களா?
Fact Check By: Chendur PandianResult: Altered


