
ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் அளித்த அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் விசாரணை வீண் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “விசாரணை அறிக்கை வீண். நீதிபதிகளே ஊழலில் திளைக்கும் போது ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் மட்டும் எப்படி சரியான அறிக்கையை கொடுக்கும்? – அண்ணாமலை பாஜக” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த பதிவை Balamurugan @Civilerbala1979 என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 19ம் தேதி பதிவிட்டுள்ளார். ஃபேஸ்புக்கில் Sankar Pechimuthu என்ற ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 19ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நீதிபதிகள் ஊழலில் திளைப்பவர்கள் என்றும், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்டு அமைக்கப்பட்ட கமிஷன்கள் அளித்த அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விசாரணை அறிக்கை வீண் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக, தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இவ்வளவு மோசமான கருத்தை அண்ணாமலை கூறியிருக்க மாட்டார். மேலும் இந்த நியூஸ் கார்டு வழக்கமாக தினமலர் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. எனவே, இந்த பதிவு பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் தினமலர் இந்த நியூஸ் கார்டை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். ஆனால், அக்டோபர் 18, 2022 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டையும் தினமலர் வெளியிடவில்லை. சற்று பின்னோக்கி சென்று பார்த்த போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை தினமலர் அக்டோபர் 15, 2022 அன்று வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அதில், “திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தோல்வி” என்று அண்ணாமலை கூறியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு உண்மையானது இல்லை, எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியானது. இதை உறுதி செய்துகொள்ளத் தினமலர் தரப்பைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், நமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
அண்ணாமலை இப்படி ஏதும் கூறியுள்ளாரா என்று அறிய 18, 19 அக்டோபர் 2022 அன்று வெளியான செய்திகளைப் பார்த்தோம். இது தொடர்பாக அண்ணாமலை எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பது தெரிந்தது. மேலும் இதை உறுதி செய்துகொள்ளத் தமிழ்நாடு பாஜக-வின் மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது 100 சதவிகிதம் போலியானது என்று நமக்கு பதில் அளித்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
விசாரணை கமிஷன் அறிக்கைகள் எல்லாம் வீண் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:விசாரணை கமிஷன் அறிக்கை வீண் என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
