மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை என்று செந்தில்பாலாஜி கூறிய பிறகும் பரவும் வதந்தி!
தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்தது என்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் கடை புகைப்படங்களை ஒன்று சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தீபாவளி பண்டிகைக்கு விடியல்_டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மது விற்க ஏற்பாடு* டாஸ்மாக் கடைகளில் 10 நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிய மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை CP Iyyappan Gowda என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 16ம் தேதி வெளியிட்டுள்ளார்.
உண்மைப் பதிவைக் காண: Facebook I dailyhunt.in I Archive
இதே போன்று இணையதளம் வெளியிட்ட செய்தி ஒன்றை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில், "மக்களே, 600 கோடி ரூபாய்க்கு குடிங்க: இலக்கு நிர்ணயித்தது தமிழக அரசு..!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பலரும் இவற்றைப் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
உண்மை அறிவோம்:
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகையின் போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிப்பது வழக்கம். வாடிக்கையாளர்களின் தேவைக்காக அதிக அளவில் மது பாட்டில்களை விற்பனைக்கு வைப்பதும் டாஸ்மாக்கின் வழக்கம். 2018ம் ஆண்டிலேயே தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மேல் விற்பனை வசூல் ஆனது. அப்படி இருக்கும் போது, 2022ல் 600 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
தந்தி டி.வி இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்திருந்தார். தந்தி டிவி வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில் அவர் "அன்பான @thanthitv , எந்த இலக்கும் நிர்ணயிக்கவில்லை.. தவறான செய்திகளை பதிவிட வேண்டாமே.. நன்றி.. " என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து தந்தி டிவி அந்த செய்தியை அகற்றியது.
ஆனால், பல ஊடகங்கள் டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்தது என்ற செய்தியை அகற்றவில்லை. அமைச்சர் தந்தி டிவி-க்கு பதில் அளித்துவிட்ட நிலையில், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வதந்தி பரவி வருவதை காண முடிந்தது.
இலக்கு எதையும் டாஸ்மாக் நிர்ணயிக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிவிட்ட நிலையில், ரூ.600 கோடி இலக்கை 2018ம் ஆண்டிலேயே டாஸ்மாக் அடைந்துவிட்ட நிலையில், 2022 தீபாவளிக்கு டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்தது என்று சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
தவறான தகவல் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் தீபாவளிக்கு விற்பனை இலக்கு நிர்ணயித்த டாஸ்மாக் என்று சமூக ஊடகங்களில் பரவும் பதிவு விஷமத்தனமானது என்பது தெளிவாகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை என்று செந்தில்பாலாஜி கூறிய பிறகும் பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False