“தோனியிடம் மன்னிப்பு கேட்ட சச்சின்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சமூக ஊடகம் விளையாட்டு

“ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் தோனிக்கு ரன் அவுட் அளித்தது சரியில்லை. அதனால், அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

IPL 2.png

https://www.facebook.com/groups/489428884557185/permalink/1303489323151133/

Archived link

சச்சின் படத்துடன் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மும்பை அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர், ‘தோனியின் ரன்-அவுட்தான் மும்பை அணிக்கு சாதகமாக அமைந்தது. பொதுவாக அம்பயர்கள் ஒரு விக்கெட்டை ரிவியூ செய்யும்போது, அதில் சரியான நிலவரம் தெரியவில்லை என்றால், அந்த நேரத்தில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது கிரிக்கெட்டின் விதிமுறை. ஆனால், நைஜல் லாங் நேற்று விதிமுறைகளை மீறி நடந்துகொண்டது அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த ரன் அவுட்டுக்காக நான் தோனியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி இந்த மாதிரியான தவறுகளை அம்பயர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் சச்சின்.” என்று உள்ளது.

இந்த பேட்டி, எந்த பத்திரிகை அல்லது செய்தி நிறுவனம் வெளியிட்டது என்ற தகவல் இல்லை. இந்த படத்தை காமெடி தர்பார் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Rahul Jekar‎ என்பவர் மே 14ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில், ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி கோப்பையை வெற்றது. இந்த போட்டியில், தோனிக்கு ரன் அவுட் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், “தோனி ரன் அவுட் ஆனது தவறு என்றும், இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று மும்பை அணியின் ஆலோசகராக உள்ள சச்சின் டெண்டுல்கர் கூறியது போலவும் பதிவு வேகமாகப் பரவி வருகிறது.

உண்மையில் அப்படி ஏதேனும் பேட்டி அளித்திருக்கிறாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், மன்னிப்பு கேட்டது உண்மையா என்று புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியும், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதும் சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டியும் நமக்கு கிடைத்தன.

IPL 3.png

அதில், “ஆட்டத்தின் முக்கிய தருணமே தோனியின் ரன் அவுட் தான். அதுதான் மும்பை அணிக்கு முக்கிய திருப்பமாக அமைந்தது” என்று சச்சின் கூறியதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியைப் படித்துப் பார்த்தோம். எந்த இடத்திலும், ரன் அவுட் தவறு என்று கூட சச்சின் டெண்டுல்கர் கூறவில்லை. விகடன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். தந்தியிலும் இதே செய்தி வெளியாகி இருந்தது. அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இது தொடர்பாக ஐ.பி.எல் இணையத்தில் வெளியான வீடியோவும் நமக்குக் கிடைத்தது. அதில், “ஆட்டத்தின் திருப்புமுனை என்ன” என்று கேட்கின்றனர். அதற்கு, “தோனியின் ரன் அவுட்தான்” என்று சச்சின் கூறுகிறார். மற்றபடி, ரன் அவுட் தவறு என்று அந்த வீடியோவில் எங்கேயும் சச்சின் கூறவில்லை. வீடியோவின், 0.57வது நிமிடத்தில் சச்சின் பேசுவதைக் காணலாம். அந்த வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

புதிய தலைமுறை வெளியிட்டிருந்த செய்தியில், சச்சின் டெண்டுல்கர் மன்னிப்பு கேட்டார் என்ற தகவல் தவறானது என்று கூறப்பட்டு இருந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில், சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி வீடியோ மற்றும் அது தொடர்பாக வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்துள்ளன. அதில், தோனியின் ரன் அவுட் தவறு என்று சச்சின் கூறவில்லை. இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“தோனியிடம் மன்னிப்பு கேட்ட சச்சின்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •