
100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இலவச மின்சாரத்தை பாஜக-வினர் விட்டுக் கொடுப்பு? இலவச மின்சாரத்தை பாஜகவினர் விட்டுக் கொடுக்க அண்ணாமலை அறிவுறுத்தல். தமிழ்நாடு அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பாஜகவினர் விட்டுக் கொடுக்க வேண்டும் என பாஜக பிரமுகர்களுக்குத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை நாகராஜன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 20ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரைப் போல சிலர் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசு மின்சார கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. 100 யூனிட் மின்சாரத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதன் அடிப்படையில் பா.ஜ.க நிர்வாகிகள் அனைவரும் தமிழ்நாடு அரசின் 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக சிலர் ஒரு நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மின்சார கட்டண உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். போராட்டம் அறிவித்திருந்தார். ஆனால், 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்கிறோம் என்று கூறவில்லை. உண்மையில் அண்ணாமலை இப்படி கூறியிருந்தால் அதுபற்றி ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கும். ஆனால், அண்ணாமலை கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது தொடர்பாக வெளியான செய்திகளில் எதிலும் இந்த தகவல் இல்லை.
மேலும், இந்த நியூஸ் கார்டு வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டுடன் ஒத்துப் போகவில்லை. தமிழ் ஃபாண்டில் வேறுபாடு காண முடிந்தது. மேலும், வாக்கிய அமைப்பிலும் வித்தியாசத்தை காண முடிந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என அறிய 2022 ஜூலை 20ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்டிருந்த நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்த போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை.
எனவே, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். அதே போன்று தமிழ்நாடு பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு, அண்ணாமலை இவ்வாறு கூறவில்லை என்று உறுதி செய்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
100 யூனிட் இலவச மின்சாரத்தை பா.ஜ.க –வினர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தினார் என பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பா.ஜ.க-வினர் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்கும்படி அண்ணாமலை அறிவுறுத்தினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
