சமையல் அறையில் திரௌபதி முர்மு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

சமையல் அறையில் மிகவும் எளிமையாக வாழ்ந்த திரௌபதி முர்மு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சமையல் அறையில் ஒரு பெண் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மிகவும் எளிமையா வாழ்ந்த இவரைத்தான்.. மோடி ஜனாதிபதியாக்கி இருக்கிறார்…!!! ஸ்ரீ திரெளபதி_முர்மூ…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Mylai Rama என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 22ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படம் மற்றும் பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

எளிமையாக வாழ்ந்த இவரைத்தான் பிரதமர் மோடி, ஜனாதிபதியாக்கி இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், படத்தில் இருப்பது திரௌபதி முர்மு என்றே குறிப்பிடுவதை உணரலாம். ஆனால், படத்தை சற்று ஸூம் செய்து பார்க்கும் போது அது திரௌபதி முர்மு போல இல்லை. எனவே, இந்த படத்தில் இருக்கும் பெண் திரௌபதி முர்முவா இல்லையா என்று உறுதி செய்வதற்காக ஆய்வை செய்தோம்.

படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது திரௌபதி முர்முவின் பழைய வீட்டின் சமையல் அறை என்று குறிப்பிட்டு சிலர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இப்படி பதிவிட்ட யாரும் படத்தில் இருப்பது திரௌபதி முர்மு என்று குறிப்பிடவில்லை. திரௌபதி முர்முவின் சமையல் அறை என்றே குறிப்பிட்டிருந்தனர்.

Archive

படத்தில் இருக்கும் பெண் இளம் வயதுடையவராக உள்ளார். எனவே, திரௌபதி முர்முவின் பழைய படமாக இருக்குமா என்று சந்தேகத்தில் ஆய்வு செய்தோம். அவருடைய இளமைக் கால படத்துடன் இந்த படத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். இருவரும் வேறு வேறு நபர்கள் என்பது தெளிவானது. தொடர்ந்து தேடிய போது சிலர் இந்த படத்தில் இருப்பது திரௌபதி முர்மு இல்லை, மத்திய அரசின் இலவச கேஸ் திட்டத்தின் படம் என்று குறிப்பிட்டு பதிலிட்டிருந்தனர். அப்படி ஏதாவது இருக்குமா என்றும் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த படமும் நமக்கு கிடைக்கவில்லை.

யூடியூபில் திரௌபதி முர்முவின் இல்லம் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, தெலுங்கு ஊடகம் ஒன்று திரௌபதி முர்முவின் சொந்த வீடு என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த வீட்டை சுற்றிக் காட்டிய பெண்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் இருக்கும் பெண் என்று தெரிந்தது. வீடியோவின் தொடக்கத்தில் திரௌபதி முர்முவின் சகோதரரின் மகள் நமக்கு வீட்டை சுற்றிக் காட்டினார் என்று குறிப்பிட்டனர்.

இப்படி திரௌபதி முர்முவின் வீட்டை பார்வையிட வந்த யாரோ ஒருவர், வீட்டை சுற்றிக் காட்டிய முர்முவின் உறவினர் பெண்ணை சமையல் அறையில் வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதை திரௌபதி முர்முவின் எளிமை என்று தவறாக குறிப்பிட்டு பதிவிட்டிருப்பது தெரிகிறது. இதன் அடிப்படையில் படத்தில் இருக்கும் பெண் திரௌபதி முர்மு இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சமையில் அறையில் திரௌபதி முர்மு அமர்ந்திருப்பதாக பகிரப்படும் படத்தில் இருக்கும் பெண் திரௌபதி முர்முவின் உறவினர் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சமையல் அறையில் திரௌபதி முர்மு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply