FACT CHECK: ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே திரைப்படம் வந்ததா?
உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே படம் வந்துவிட்டது என்றும், திட்டமிட்டபடி கொரோனா வைரஸ் பரவல் நடந்து வருகிறது என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
"The omicron Variant" என்ற திரைப்படம் ஒன்றின் போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இந்த நாகரீக வாழ்வே.. அவன் கட்டமைத்த நாடக மேடையில் தான்.. அதில் இருந்துகொண்டு நம்மை நாம் உணரமுடியாது..எல்லாமே மாயைதான்.. இயற்கை யை தேடுங்கள்.. அதுவே தீர்வு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை கார்த்திக் இயற்கை காதலன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 3ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒமிக்ரான் வைரஸ் என்பது கொரோனா வைரஸின் உருமாற்றம் ஆகும். இது புதிதாக உருவான வைரஸ் இல்லை. ஒமிக்ரான் என்பது கிரேக்க எழுத்தாகும். தமிழில் அ, ஆ, இ, ஈ என்று இருப்பது போல கிரேக்கத்தில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்பது எழுத்தாகும். அதனால் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள், வகைப்படுத்துதலுக்குக் கிரேக்க எழுத்துக்களை வைப்பது வழக்கமான ஒன்று. இந்த புரிதல் இன்றி ஏற்கனவே ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே படம் வந்துவிட்டது, திட்டமிட்டது போன்று வைரஸ் பரப்பப்படுகிறது என்று எல்லாம் சமூக ஊடகங்களில் வதந்தியைப் பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
உண்மையில் தி ஒமிக்ரான் வேரியண்ட் என்ற பெயரில் படம் வந்ததா, அது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வந்து உலக மக்களைத் தாக்குவது போன்ற படமா என்று ஆய்வு செய்தோம். முதலில் இந்த படத்தின் போஸ்டரை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, Sucesos en la IV Fase என்று படத்தின் போஸ்டர் கிடைத்தது. தி ஒமிக்ரான் வேரியண்ட் என்று எந்த படமும் நமக்கு கிடைக்கவில்லை.
அசல் பதிவைக் காண: todocoleccion.net I Archive
1974ல் வெளியான "சக்சஸ் இன் லா 4 பேஸ்" என்ற படத்தின் போஸ்டரை தற்போது கொரோனா ஒமிக்ரான் வேரியண்ட் பரவும் சூழலில் எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.
ஒமிக்ரான் என்ற பெயரில் படம் ஏதும் வந்துள்ளதா என்று தேடிப் பார்த்தோம். Omicron என்ற பெயரில் இத்தாலி மொழியில் 1963ம் ஆண்டு திரைப்படம் வெளியாகி இருப்பது தெரிந்தது. பூமியில் உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை வெளிகிரகத்தைச் சேர்ந்தவர்கள் எடுத்துக்கொண்டு செல்வது போன்ற படம் என்று அதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: imdb.com I Archive
இதன் மூலம் ஒமிக்ரான் வைரஸ் திட்டமிட்டபடி பரப்பப்பட்டு வருகிறது என்றும், இவற்றைப் பற்றி ஏற்கனவே திரைப்படங்கள் வந்துவிட்டது போலவும் பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பூமியில் மனிதர்களை அழிக்கும் ஒமிக்ரான் கிருமி என்று பல ஆண்டுகளுக்கு முன்பே படம் வெளியாகிவிட்டது என்று சமூக ஊடகங்களில் பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே திரைப்படம் வந்ததா?
Fact Check By: Chendur PandianResult: Altered