
டெல்லி சென்ற ஸ்டாலினை அழைத்து வர தன்னுடைய குண்டு துளைக்காத காரை பிரதமர் மோடி அனுப்பினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரதமர் பயன்படுத்தும் கார் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஆளுமைமிக்க_தலைவனுக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் கிடைக்கும் அடிமைகளுக்கு அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை தளபதி மனோஜ் என்பவர் 2021 ஜூன் 16ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மோடி முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு பிரத்யேக குண்டு துளைக்காத காரை அனுப்பி வைக்க இருப்பதாக தினமலரில் செய்தி வெளியானது. அதை வைத்து, தமிழகம் வரும் மோடிக்கு தி.மு.க-வினர் கருப்புக் கொடி காட்டியும், கோ பேக் மோடி என்று டிரெண்ட் செய்தும் எதிர்ப்பை காட்டுகின்றனர்.
ஆனால், டெல்லிக்கு வந்த தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அழைத்து வர தன்னுடைய புல்லட் ப்ரூஃப் காரை மோடி அனுப்பினார் என்று ட்விட்டரில் சிலர் பதிவிட்டனர். அதைத் தொடர்ந்து தி.மு.க-வினர் பலரும் ஆளுமைமிக்க தலைவர் என்று குறிப்பிட்டு பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது.
Archive I dinamalar.com I Archive 2
உண்மையில் மோடி தன்னுடைய காரை அனுப்பினாரா என்று ஆய்வு செய்தோம். இது தொடர்பாக தேடிய போது மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானதாக செய்தி இல்லை.
அதே போல், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான தகவல் என்று கூட எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் 2014ம் ஆண்டில் இருந்தே ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: abplive.com I Archive
தொடர்ந்து தேடியபோது, ஏபிபி நாடு வெளியிட்ட செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில் பிரதமரை சந்திக்க உள்ள ஸ்டாலினை அழைத்துச் செல்ல பிரதமர் அலுவலகத்தில் இருந்து புல்லட் ப்ரூஃப் கார் எதுவும் அனுப்பப்பட்டதா என்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு விசாரித்ததாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் பயன்படுத்துவதற்கு என்று அதிகாரப்பூர்வ வாகனம் உள்ளது. அந்த வாகனத்தில்தான் பிரதமரை சந்திக்க செல்ல உள்ளார்” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்ட போது, “பிரதமர் அலுவலகத்தில் இருந்து கார் வருகிறது என்று சொல்வது எல்லாம் உண்மையில்லை. அரசின் அதிகாரப்பூர்வ வாகனத்தில்தான் முதல்வர் செல்கிறார்” என்று தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையே 2021 ஜூன் 17ம் தேதி மாலை மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டு சென்ற காட்சிகள் நமக்குக் கிடைத்தன. அதில், தமிழ்நாடு அரசின் வெள்ளை நிற வாகனத்தில் அவர் புறப்பட்டு சென்றது தெரிந்தது.
இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்துவர பிரதமர் மோடி தன்னுடைய குண்டு துளைக்காத காரை அனுப்பினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
டெல்லி வந்த மு.க.ஸ்டாலினை அழைத்து வர புல்லட் ப்ரூஃப் காரை பிரதமர் மோடி அனுப்பினார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஸ்டாலினுக்காக மோடி அனுப்பிய குண்டு துளைக்காத கார் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
