
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அணியின் நிர்வாகி விளக்கம் அளித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயலாக்க அதிகாரி வெளியிட்டது போன்று அறிக்கையின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”நாதகவை சேர்ந்த திரு.சீமான் என்பவருக்கும் CSK அணி வீரர்களுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை.
CSK அணி வீரர்களுக்கு பயிற்சி அளித்ததாகவோ, உடன் அமர்ந்து உணவு உண்டதாகவோ திரு.சீமான் கூறினால் அது முழுக்க முழுக்க பொய்யான தகவல் ஆகும்”. -CSK நிர்வாகம் முன்னெச்சரிக்கை அறிக்கை வெளியீடு. என்னாங்கடா கடிதமாவே எழுதிட்டானுங்க…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Lion Balaji T Porur @b4l4ji என்ற ட்விட்டர் ஐடியைக் கொண்டவர் 2023 மே 30ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரபலங்கள் பலரும் தன்னிடம் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், அவர்களுக்கு பல விஷயங்களை நான்தான் கற்றுக்கொடுத்தேன் என்று சீமான் கூறியதாக சமூக ஊடகங்களில் அவ்வப்போது நையாண்டி பதிவுகள் வெளியாகும். நையாண்டி பதிவுகளை நாம் ஃபேக்ட் செக் செய்வது இல்லை. ஆனால், இதையும் ஏராளமானவர்கள் லைக் மற்றும் ரீட்வீட் செய்துள்ளதால் இது பற்றி கட்டுரை வெளியிட முடிவு செய்தோம்.
முதலில் இப்படி ஏதேனும் அறிக்கை வெளியாகி உள்ளதா என்று செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்களில் தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அடுத்ததாக இந்த அறிக்கையை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இதே லோகோ, லெட்டர் பேட், முத்திரையுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு டிக்கெட் விற்பனை தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகி அறிக்கை வெளியிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது. அந்த அறிக்கையின் கருத்தை மாற்றிவிட்டு, சிஎஸ்கே வீரர்களுக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை, குறிப்பாக அவர்களது பயிற்சி, வீரர்கள் நிர்வாகம் என எதிலும் சீமானுக்கு தொடர்பில்லை என்று கதை எழுதி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இந்த அறிக்கையை பிஆர்ஓ-க்கு அனுப்பி இதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து தர வேண்டும் என்று கேட்டோம். ஆனால், நமக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இதை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலருக்கும் அனுப்பினோம். அவர்கள் இது சீமான் பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள வதந்திதான்” என்றனர். சிஎஸ்கே தரப்பில் விளக்கம் அளித்தால் அதையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்விட்டர் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சீமானுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதாக பரவும் அறிக்கை போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:சீமானுக்கும் சிஎஸ்கே வீரர்களுக்கும் தொடர்பில்லை என்று சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் வெளியிட்டதா?
Written By: Chendur PandianResult: False
