அயோத்தியில் இயக்கப்பட உள்ள எலக்ட்ரிக் பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

அயோத்தியில் இயக்கப்படத் தயார் நிலையில் உள்ள எலக்ட்ரிக் பஸ்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் ஜனவரி 9, 2024 அன்று பகிரப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அயோத்தியில் இயக்குவதற்கு எலக்ட்ரிக் பஸ்கள் தயார்நிலையில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் ஜனவரி 22, 2024 அன்று ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழலில் அயோத்தியில் இயக்குவதற்கு தயாராக உள்ள எலக்ட்ரிக் பஸ்கள் என்று ஒரு புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக புத்தம் புதிய எலக்ட்ரிக் பஸ்கள் தயார் நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்துகிறது. இந்த புகைப்படம் அயோத்தியில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: freepressjournal.in I Archive

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2022ம் ஆண்டிலிருந்து செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதில், டெல்லி போக்குவரத்துக் கழகம் 1500 எலக்ட்ரிக் பஸ்களை இயக்க டாடா மோட்டார்ஸ் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

இந்த புகைப்படத்தை டெல்லி பாஜக தலைவரும் தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் 2022 மே 24ம் பதிவிட்டிருந்தார். டெல்லியில் 150 எலக்ட்ரிக் பஸ்களை இணைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் 2022ம் ஆண்டு பதிவிடப்பட்டிருந்த படங்கள் சற்று தெளிவாக இருந்தன. அதில் D Switch delhi என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது என்ன என்று தேடிப் பார்த்தோம். அது டெல்லி அரசின் டெல்லி முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்களின் தலைநகராக மாற்றி, டெல்லியை தூய்மையான, பச்சை பசுமையான நகராக மாற்றும் திட்டத்தின் பெயர் என்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த பஸ்கள் எல்லாம் அயோத்தியைச் சார்ந்தது இல்லை, டெல்லியைச் சார்ந்தது என்பது தெளிவானது.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் டெல்லியைச் சார்ந்தது என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக இயக்க தயார்நிலையில் உள்ள எலக்ட்ரிக் பஸ்கள் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் பஸ்கள் என்று பரவும் புகைப்படம் டெல்லியைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அயோத்தியில் இயக்கப்பட உள்ள எலக்ட்ரிக் பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False