
‘’தமிழகத்தில் இருந்து பட்டாசு வாங்க முடியாது என்று கூறிய யோகி ஆதித்யநாத் -டிஎன் நியூஸ் 24 செய்தி,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

மேற்கண்ட தகவலை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப் வழியே, நமக்கு அனுப்பி, இது உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்படியே ஃபேஸ்புக்கிலும் பலர் இதனை பகிர்ந்து வருவதைக் கண்டோம்.
டிஎன் நியூஸ் 24 பெயரில் பகிரப்படும் இந்த நியூஸ் கார்டில், ‘’ஹிந்துவிரோதிகளின் கூடாரமான தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழிலாளர்கள் வறுமையால் சாவார்கள் என்பதற்காக தூய பூமியான உ.பியை குப்பை மேடாக்க முடியாது. பட்டாசு தடை குறித்து யோகி ஆதித்யநாத்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இது உண்மையான செய்தியாக இருக்கும் என்று நம்பி, பலரும் இதற்கு எதிர்வினையாற்றி, சமூக வலைதளங்களில் கருத்து பகிர்கின்றனர். அவற்றில் சில ஃபேஸ்புக் பதிவுகளையே நாமும் மேலே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.
உண்மை அறிவோம்:
முதலில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டதா, என தகவல் தேடினோம். இதன்படி, உத்தரப் பிரதேச அரசு, காற்று மாசு ஏற்படாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் 2020 தீபாவளி பண்டிகைக்கு, அம்மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் பட்டாசு வெடிக்க, விற்க தடை விதிக்கப்பட்டதாக, செய்திகள் காணக் கிடைத்தன.
முதலில், தேசிய பசுமை தீர்ப்பாயம், தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதித்திருந்தது. இதை பின்பற்றி உத்தரப் பிரதேச மாநில அரசும், அம்மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இந்த தடையை விதித்திருக்கிறது.
அதேசமயம், யோகி ஆதித்யநாத், தமிழகம் தேச விரோதிகளின் இடம் என்பதால், அங்கிருந்து பட்டாசு வாங்க மாட்டேன் என்று கூறினாரா எனத் தேடினால், அப்படி எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை. அவர் பற்றி கிடைத்த செய்திகள் வேறாக இருந்தன.
எனவே, இப்படி TNNews 24 ஊடகம் செய்தி வெளியிட்டதா என தேடினோம். நீண்ட நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினாலும் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அவர்களையே தொடர்பு கொண்டு விளக்கம் பெற முடிவு செய்தோம். இதன்படி, நண்பர் ஒருவரின் உதவியுடன், டிஎன் நியூஸ் 24 ஊடகத்தின் மேலாண் இயக்குனர் (MD) உதய குமாரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், ‘’இந்த தகவல் எங்களது பெயரில் பகிரப்பட்டு வருகிறது. நாங்கள் இப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை. இது டிஎன்நியூஸ் 24 பெயரில் பரவும் போலியான நியூஸ் கார்டு,’’ எனக் கூறினார்.
எனவே, நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:யோகி ஆதித்யநாத் பற்றி டிஎன் நியூஸ் 24 ஊடகம் வெளியிட்ட செய்தி உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
